Published : 16 Jul 2020 01:14 PM
Last Updated : 16 Jul 2020 01:14 PM

கரோனா வைரஸ் பரவல் விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்: பாமக தீர்மானம்

அரசு சிறப்பாகச் செயல்படுவதால் மட்டுமே கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பாமக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாமக தொடங்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாமக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன. அதில் கரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் வருமாறு:

உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று வரை 1,51,820 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,496 ஆகும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகில் கரோனா பரவல் உள்ள 215 நாடுகளில் 207 நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைவிட அதிகம் ஆகும். அதேபோல் சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,291 பேரும், ஒட்டுமொத்தமாக 80,961 பேரும் கரோனா வைரஸ் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கரோனா வைரஸ் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் மோசமாக உள்ளது. சென்னையில் கரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்தபோது, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, காய்ச்சல் முகாம்களை நடத்தியது, வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகளுடன் எவரேனும் உள்ளார்களா? என்பதை ஆய்வு செய்தது, முழு ஊரடங்கு பிறப்பித்து பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தடுத்தது, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத்தான் நோய்ப்பரவல் ஓரளவாவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டங்களிலும் கரோனா பரவல் எந்த அளவில் உள்ளது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் புதிய உத்திகளை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும்; சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்படும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ஒவ்வொரு ஊரிலும் காய்ச்சல் முகாம்களை நடத்தி கரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய வேண்டும். இத்தகைய பணிகள் மூலம் மாவட்டங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வாரம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும்.

அதே நேரத்தில், அரசு சிறப்பாகச் செயல்படுவதால் மட்டுமே கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்தல், முகக்கவசம் மற்றும் கையுறை அணிதலைக் கட்டாயமாக்கிக் கொள்ளுதல், வெளியில் சென்று திரும்பியவுடன் சோப்பு நீரால் கழுவுதல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு பாமக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x