Published : 16 Jul 2020 12:55 PM
Last Updated : 16 Jul 2020 12:55 PM

போயஸ்கார்டன் இல்லம் தொடர்பாக தீபக் தொடர்ந்த வழக்கு: நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் பரிந்துரை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையைக் கைவிட்டு, வீட்டுச் சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்துப் பட்டியலிடும்படி, தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (ஜூலை 15) தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளைக் கைவிட்டு, வீட்டுச் சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், "வேதா நிலையம் வீடு, தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயில் எழுதி வைத்திருந்தார். அந்த இல்லத்தைக் கோயில் போல பயன்படுத்திய தனது அத்தை ஜெயலலிதா, முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அந்த வீட்டிலேயே நடத்தி வந்தார்.

தனது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என எந்தக் கட்டத்திலும் ஜெயலலிதா தெரிவித்ததில்லை. தமிழக அரசு அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது சம்பந்தமான என் ஆட்சேபனையையும், என் சகோதரி தீபாவின் ஆட்சேபனையையும் அரசு பரிசீலிக்கவில்லை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள எங்களின் கருத்துகளைத் தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், பொதுப் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது பொதுப் பயன்பாடு அல்ல.

வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும். வேதா நிலையத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்த போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து 2017-ல் அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தீபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர் தரப்புக் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், 2017 முதல் 2020-ம் ஆண்டு இதுவரை தீபக் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை" என வாதிட்டார்.

ஊரடங்கு நேரத்தில் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும், தன்னையும், சகோதரியையும் சட்டபூர்வ வாரிசாக அறிவித்த உயர் நீதிமன்றம், நினைவில்லம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது என தீபக் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. சட்டபூர்வ வாரிசுகள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை முதலில் இருந்து புதிதாகத் தொடங்க வேண்டும் என தீபக் தரப்பில் வலியுறுத்தப்பட்டது

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "தீபக் தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு. 2018 டிசம்பர் மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொது விசாரணையில் அவர்கள் தெரிவித்த ஆட்சேபனை கருத்தில் கொள்ளப்பட்டு மே 7-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது" எனத் தெரிவித்தார்.

தற்போது இழப்பீடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் தீபா, தீபக் மற்றும் 36 கோடி ரூபாய் வரி பாக்கிக்காக வருமான வரித்துறையும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "மனுதாரரையும் அவரது சகோதரியையும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த உயர் நீதிமன்றம், அறக்கட்டளை அமைத்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கும், இரு நீதிபதிகள் அமர்வில் உள்ள வழக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால், இந்த வழக்கையும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும்" எனத் தெரிவித்தார். இரு வேறு தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்க இந்த வழக்கை, கிருபாகரன் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x