Published : 16 Jul 2020 10:13 AM
Last Updated : 16 Jul 2020 10:13 AM

ஈரோட்டில் இருந்து மருத்துவ அவசர இ-பாஸ் பெற்று துப்பாக்கியுடன் வந்த 3 பேர் கோவில்பட்டியில் கைது: தோட்டாக்கள், 2 அரிவாள், கார் பறிமுதல்

காரில் துப்பாக்கியுடன் வந்தபோது கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்ட குமுளி ராஜ்குமார், வினோத், சுரேந்தர்.

கோவில்பட்டி

ஈரோட்டில் இருந்து மருத்துவ அவசர இ-பாஸ் பெற்றுக்கொண்டு துப்பாக்கியுடன் வந்த 3 பேர் கோவில்பட்டி காவல் சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்ட எல்லை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீஸார் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். இதில் காரில் இருந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் காரை சோதனையிட்டனர்.

காரில், 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்கள் இருந்தன. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கிழக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் தலைமையில் காவல் ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (37), பாளையங்கோட்டை படப்பைகுறிச்சி காந்தி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (26), திருநெல்வேலி கொக்கிரகுளம் மேலநத்தத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுரேந்தர் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த 13-ம் தேதி குமுளி ராஜ்குமார் மருத்துவ அவசர இ-பாஸ் பெற்று, வினோத், சுரேந்தர் ஆகியோருடன் திருநெல்வேலி தச்சநல்லூரில் இருந்து ஈரோடு சென்றுள்ளனர். அங்கு அவர்களது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு, 2 நாட்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இ-பாஸ் 13, 14-ம் தேதி என 2 நாட்களுக்கு மட்டுமே. ஆனால், அவர்கள் நேற்று முன்தினம் இரவு (15-ம் தேதி) அதே இ-பாஸை வைத்து கொண்டு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி தச்சநல்லூர் வந்தபோது, கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில் சிக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 2 அரிவாள்கள், 5 செல்போன்கள் மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள குமுளி ராஜ்குமார் மீது 7 கொலை வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 26 வழக்குகள் உள்ளன. வினோத் மீது 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன. சுரேந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தொடரும் அதிரடி:

காசி - கன்னியாகுமரி தேசிய நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில், இ-பாஸ் போன்று முறையான அனுமதியில்லாமல் மற்ற மாவட்டங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கடந்து வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டு வந்தது. இதே சோதனைச்சாவடியில் தான் காலாவதியான இ-பாஸ் வைத்து கொண்டு வந்த குமுளி ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x