

கல்வி, தொழில் வளர்ச்சி, நீர்வளம்உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றியவர் காமராஜர் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 118-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
காமராஜரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இந்த வேளையில் அவரைப் பற்றிநினைவுகூர்வதை பெருமையாக கருதுகிறேன். நாட்டின் சுதந்திரபோராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர். திருமணமும், இல்லறமும் சமுதாயப் பணிக்கு தடையாக இருக்கும் என கருதி பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர்.
கடந்த 1954-ம் ஆண்டில் சென்னை மாநில முதல்வராக பொறுப்பேற்ற பின், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பள்ளிகளை அமைத்து தமிழ்ச் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கினார். பல தொழிற்சாலைகளை நிறுவி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
மக்களின் வாழ்க்கை தரத்தில், கல்வியில், தொழில் வளர்ச்சியில், நீர்வளத்தில் முன்னேற்றம் எனதமிழகத்தின் முதல்வராக இருந்தபோது அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த காமராஜரைப் போல் ஜெயலலிதாவின் அரசும் தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று பீடு நடைபோடும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.