

‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாலினி பார்த்தசாரதிக்குமுதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் தலைவராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த ‘தி இந்து’ குழும இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாலினி பார்த்தசாரதிக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்கும் டாக்டர் மாலினி பார்த்தசாரதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தி இந்து’ செய்தித்தாள் குழுமத்தை மிக உயரத்துக்கு அவர் கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சிறப்புமிக்க ‘தி இந்து’ குழும பதிப்பக நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் மாலினி பார்த்தசாரதிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘தி இந்து’பத்திரிகையின் ஆசிரியராகவும் ‘தி இந்து மையத்தின்' இயக்குநராகவும் சிறப்புற பணியாற்றியுள்ளார். அவருடைய புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.