பட்டினப்பாக்கத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி: கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விபரீதம்

பட்டினப்பாக்கத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி: கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விபரீதம்
Updated on
2 min read

பட்டினப்பாக்கத்தில் வீட்டின் கழிவுநீர்த் தொட்டி அடைப்பைச் சரிசெய்ய இறங்கிய தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். வீட்டின் உரிமையாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் வசிப்பவர் குபேந்திரன் (53). இவர் சித்த மருத்துவர். இவரது வீட்டின் கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் அதே பகுதியில் வசிக்கும் குடிசைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35) மற்றும் சாஹின்ஷா (32) என்ற இரண்டு தொழிலாளர்களை அடைப்பு நீக்க அழைத்துள்ளார்.

கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்கள் இறங்கக்கூடாது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறங்கக்கூடாது என்கிற அடிப்படை எதுவுமில்லாமல் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் குபேந்திரன் அவர்களை ஈடுபடுத்தினார். மதியம் 2 மணி அளவில் இருவரில் சாஹின்ஷா முதலில் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர் உள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உள்ளே இறங்கியவர் மயக்கமானதை அடுத்து பதற்றமான நாகராஜ், சிறிதும் யோசிக்காமல் இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்க, மயக்கமாகி உயிரிழந்துள்ளார். இருவரின் உடலும் தொட்டிக்குள் இருந்த கழிவுநீரில் மூழ்கியபடி கிடக்க அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் குபேந்திரன் உடனடியாக பட்டினப்பாக்கம் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

நல்வாய்ப்பாக வேறு யாரும் அவர்களை மீட்க உள்ளே இறங்காததால் மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் வந்து போதிய உபகரணங்களுடன் இறங்கி அவர்கள் உடலை மேலே தூக்கி வந்தனர். அவர்களைச் சோதித்தபோது அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் இருவர் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாக ஐபிசி பிரிவு 304(ஏ)-ன் கீழ் பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனைக் கைது செய்தனர்.

இது சம்பந்தமாக ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்பு மற்றும் கண்காணிப்பு உறுப்பினர் எஸ்.கே.சிவாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது வேலைக்கு அமர்த்தியவர் தர வேண்டும். அவர்களால் தர முடியாவிட்டால் இதுபோன்ற செயல்கள் நடப்பதைத் தடுக்காத அரசு இழப்பீட்டைத் தரவேண்டும்.

இறந்தவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக அந்தக் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கிலும் வன்கொடுமைச் சட்டம் சேர்க்கப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in