சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி- தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு 

உள் படம்: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன்
உள் படம்: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிபிஐ தரப்பில் வாதிட்டத்தை நிராகரித்த நீதிபதி, இந்த மனுவை விசாரிக்க இந்நீதிமன்றத்துக்கு முழு அதிகார வரம்பு உள்ளது என்பதை உறுதிபடுத்தினார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு இல்லை. தவறாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். அதுபோல சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இதேபோல் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த நீதிபதி என்.லோகேஸ்வரன், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in