

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நாளை (ஜூலை 16) நடக்கும் சந்தைக்கு இன்றே வியாபாரிகள் இடம் பிடித்தனர்.
சமூக இடைவெளியின்றி நடக்கும் சந்தையில் கூட்டத்தைத் தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடந்து வந்தது. கரோனா அச்சத்தால் வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டு, சீரணி அரங்கத்தில் கடைகள் வைக்கப்பட்டன.
அங்கும் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் சந்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சேவுகபெருமாள் அய்யனார் கோயில் மேலரத வீதியில் தற்காலிக சந்தை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அங்கு வாரந்தோறும் 300-க்கும் மேற்பட்ட கடைகள் சாலைகளின் இருபுறமும் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடைகளுக்கு இடம் பிடிப்பதற்கு வியாபாரிகளிடம் போட்டி நிலவுகிறது.
இதனால் நாளை நடக்கும் சந்தைக்கு இன்றே வியாபாரிகள் சாக்குகளை விரித்து கற்களை வைத்து இடம் பிடித்தனர். மேலும் கடந்த வாரங்களில் வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.
மேலும் கூட்டம் அதிகமானதால் சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சில கடைகளை திண்டுக்கல் ரோடு மற்றும் மேலூர் ரோட்டிலும் அமைக்க அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.