சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது: தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி

சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது: தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி
Updated on
1 min read

தூத்துக்குடி சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என்றார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இன்று காலை கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்நிலையில் கல்விளையில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய் பாலத்துக்கு அடியில் தண்ணீர் டிரம் ஒன்றில் சிறுமி உடல் கிடப்பதாக சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸார் அங்கு சென்றுபார்த்த போது, காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் தான் அது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகம் எழுப்பினர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

மாவட்ட எஸ்.பி. பேட்டி:

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்துறை உடனடியாக கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்கள்.

பாலியல் ரீதியாக சிறுமிக்கு துன்புறுத்தல் உள்ளதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே சொல்லமுடியும் தற்போது அதற்கான அடையாளங்கள் இல்லை என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in