Published : 15 Jul 2020 07:23 PM
Last Updated : 15 Jul 2020 07:23 PM

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவதை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து போயஸ்கார்டன் - கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஊரடங்கு நேரத்தில் கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டப்படுகிறது. சட்டபூர்வ வாரிசுகளை விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக பாதிப்பு மதிப்பீட்டின்போது குடியிருப்புவாசிகளின் குறைகள் கேட்கப்படவில்லை. அறிக்கை நகலும் வழங்கப்படவில்லை. கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை முழுவதும் கண்துடைப்பு” என வாதிட்டார்.

இதற்கு தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பதிலளிக்கையில், “கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. எந்த அவசரமும் காட்டப்படவில்லை. தமிழகத்தில் மக்களின் அன்பைப் பெற்ற பல தலைவர்களுக்கு நினைவு இல்லங்கள் உள்ளன. இது முதல் நினைவு இல்லமல்ல.

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், போயஸ் தோட்ட இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இல்லத்தில் உள்ள அசையா சொத்துகளைக் கையகப்படுத்தவே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி முடிவை எட்டவில்லை. மனுதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும்.

தற்போதைய நிலையில் முன் கூட்டியே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தலையிட எந்தக் காரணமும் இல்லை” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''தற்போதைய நிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தலையிட எந்தக் காரணமும் இல்லை.

மனுதாரர் கூறுவதுபோல இதில் எந்தப் பொது நலனும் சம்பந்தப்படவில்லை. ஏராளமான மக்கள் வருகை தருவர். இடையூறு தருவர் என்பதே மனுதாரர் சங்கத்தின் அச்சமாக உள்ளது.

அரசு நடவடிக்கையில் தலையிட முடியாது. முதல்வர் அலுவகமாகப் பயன்படுத்த வேண்டுமென்ற உயர் நீதிமன்ற ஆலோசனை கருத்தில் கொள்ளப்படவில்லை என்ற வாதம் நிலைத்து நிற்கவில்லை. ஏனென்றால் அதை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது. ஆகவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x