Published : 15 Jul 2020 07:11 PM
Last Updated : 15 Jul 2020 07:11 PM

விளைபொருட்கள் தேக்கத்தால் விவசாயிகள் விரக்தி: உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை

வெளிமாவட்டம், வெளிமாநிலச் சந்தைகளில் இருந்து விளைபொருள்களை மொத்தமாக வாங்கிச்செல்லும் தரகர்களின் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உள்ளூர்ச் சந்தைகளில் உரிய விலை கிடைக்கவில்லை. தேவையும் குறைவாக இருப்பதால் காய்கனிகளைத் தோட்டங்களிலேயே பறிக்காமல் விடும் சூழல் எழுந்துள்ளது. உற்பத்திச் செலவை ஈடுகட்டும் அளவுக்குக்கூட சந்தை வாய்ப்பு இல்லாததால் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர் விவசாயிகள்.

’இதே நிலை நீடித்தால் கரோனா முற்றாக ஒழியும்வரை விவசாயத்தைச் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் முடிவுக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். இது பஞ்ச காலத்தைப் போல் உணவுத் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும்’ என எச்சரிக்கிறார் குமரி மாவட்டம், துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி செண்பகசேகரன் பிள்ளை.

மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினரும், மாவட்ட வேளாண் இடுபொருள் கொள்முதல் கமிட்டி உறுப்பினருமான செண்பகசேகரன் இது தொடர்பாக நம்மிடம் பேசுகையில், ‘‘விவசாயிகளையும் கரோனா மிகவும் கஷ்டமான சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. சந்தைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்துவரும் இடைத்தரகர்கள் வரத்து இப்போது இல்லை. குமரி மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தியாகும் காய்கனிகளும், மலர்களும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. அது இப்போது முற்றாக நின்றுள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாததால் விவசாயிகளே தனியாக வாகனம் அமர்த்திக் கொண்டு சந்தைக்குச் செல்லவேண்டியுள்ளது. அதுவே பெரிய செலவுதான். விதைப்பில் இருந்து அறுவடைக்கூலி வரை கொடுத்து, போக்குவரத்துச் செலவும் செய்யும் அளவுக்கு சந்தையில் விளைபொருள்களுக்கு விலை இல்லை.

இன்னொரு பக்கம், வியாபாரிகள் நுகர்வோர்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதாகச் சொல்லி எங்களிடம் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்குகிறார்கள். ஆனால், நுகர்வோரிடம் நல்ல விலைக்குத்தான் விற்கிறார்கள். முன்பு வெளியூர்களுக்கு விளைபொருள்களை அனுப்பி வைத்தபோது கிடைத்த நியாயமான விலை இப்போது கிடைப்பதில்லை. திருமணம், கோயில் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் 50 பேரோடு முடிந்து விடுவதால் மொத்தமாகக் காய்கனி வாங்குபவர்களும் குறைந்துவிட்டார்கள். இதெல்லாம் சேர்த்து உள்ளூர்ச் சந்தைகளில் கிடைக்கும் விலைக்குக் காய்கனிகளை விற்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

செண்பகசேகரன்

விவசாயிக்கு பத்து நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ பூசணிக்காய்க்கு 12 ரூபாய் கொடுத்தார்கள். இன்று ஒரு கிலோவுக்கு 3 ரூபாய்தான் கிடைக்கிறது. இது ஒரு சோறு பதம்தான். இதில் வயல் தயாரிப்பு, விதைப்பு, பராமரிப்பு, அறுவடைக்கூலி, போக்குவரத்துச் செலவுகளை எல்லாம் கணக்கில் எடுத்தால் பூசணியைப் பறிக்காமல் விட்டுவிடுவதே நல்லது என்னும் முடிவுக்கு விவசாயிகள் வந்து விடுவார்கள்.

கேரளத்தில் ஓணம் பண்டிகை காலத்தில் ’மாவேலி ஸ்டோர்ஸ்’ என்னும் அங்காடியை அரசே திறக்கும். அதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களும் சந்தைப்படுத்தப்படும். அதேபோல் கரோனா காலத்தில் அரசே விவசாயிகளின் விளைபொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்யும் வசதியைச் செய்துதர வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும். நுகர்வோர்களுக்கும் நியாயமான விலையில் பொருள்களை வழங்க முடியும்.

அது இல்லாத பட்சத்தில் விவசாயிகளின் மனச்சோர்வு அடைந்து விவசாயத்தில் கவனம் செலுத்தாமல்போய் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x