Published : 15 Jul 2020 06:49 PM
Last Updated : 15 Jul 2020 06:49 PM

உயிரிழப்பு இல்லை; புற்றுநோயாளி உட்பட 1,100 பேருக்கு மேல் கரோனாவிலிருந்து மீண்டனர்; சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி

சித்த மருத்துவர் வீரபாபு

சென்னை

தமிழகத்தில் ஜூலை 14-ம் தேதி நிலவரப்படி, 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 79 ஆயிரத்து 662 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு 2,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில், சில தினங்களாக சுமார் 1,200 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.நேற்று (ஜூலை 14) சென்னையில் 1,078 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது. சென்னை மட்டுமல்லாது சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் கடந்த ஜூன் மாதம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கென 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையம், தற்போது 425 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஒரு வயது முதல் அதிகபட்சமாக 91 வயது வரையிலான கரோனா நோயாளிகள் இங்கு குணப்படுத்தப்படுகின்றனர். நீரிழிவு முதல் புற்றுநோய் வரை ஏற்கெனவே இணை நோய் உள்ளவர்கள் கரோனாவிலிருந்து மீள்வது சித்த மருத்துவம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது.

இந்நாள் (ஜூலை 15) வரை அம்மையத்தில் மொத்தமாக 1,560 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அதில், 1,110 பேர் குணமடைந்திருக்கின்றனர். 450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சித்த மருத்துவம் மீதான நம்பிக்கை காரணமாக, மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியிலும் இதற்கான மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சென்னை வியாசர்பாடியில் 224 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் ஒருவார காலத்தில் குணமடைவதாக ஏற்கெனவே கடந்த ஜூன் 8-ம் தேதி 'இந்து தமிழ் திசை'க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார், சித்த மருத்துவரும், கரோனா சிகிச்சைக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவருமான வீரபாபு.

இந்நிலையில், உயிரிழப்புகளே இல்லாமல் இணை நோய் உள்ளவர்களும் கரோனாவிலிருந்து மீள்வது எப்படி என, சித்த மருத்துவர் வீரபாபு, 'இந்து தமிழ் திசை'க்கு மீண்டும் அளித்துள்ள இப்பேட்டியில் விளக்கமளிக்கிறார்.

கரோனா தொற்றுக்காக சித்த மருத்துவ மையம் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், மக்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?

மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஜவஹர் பொறியியல் கல்லூரியில் காலிப் படுக்கைகள் என்பதே இல்லை. கரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறக் காத்திருக்கின்றனர். நீரிழிவு நோயுள்ளவர்கள், வயதானவர்கள் குணமடைவதை நல்ல முன்னேற்றமாகப் பார்க்கிறோம். அம்பேத்கர் கல்லூரியில் அண்ணா சித்த மருத்துவமனை, தேசிய சித்த மருத்துவமனை இணைந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களிலும் சிறிய அளவில் பரிட்சார்த்த முயற்சியில் சித்த மருத்துவ சிகிச்சையை அளிக்கத் தொடங்கியுள்ளோம்.

கரோனா நோயாளிகள் 5-7 நாட்களில் குணமடைகின்றனர் என்று கூறுகிறீர்கள். உயிரிழப்பு நேராமல் எப்படித் தடுக்கிறீர்கள்?

இந்த மையத்தில் புற்றுநோயாளிகள், சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வருகின்றனர். கரோனா தொற்றால் அவர்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுள்ளதோ அந்த ஆபத்திலிருந்து அவர்களை மீட்பதுதான் முதல் கடமை. 'பாசிட்டிவ்' எனத் தெரிந்தவுடன் தாமதிக்காமல் வந்துவிட்டால், உயிரிழப்பு நேராமல் தடுக்கலாம். குறைந்த நாட்களில் குணமடைகின்றனர் என்பதை மக்களைக் கவர்வதற்காகக் கூறவில்லை. குணமடைந்தவர்களின் விவரங்கள், சென்னை மாநகராட்சியிடம் உள்ளன. இந்த மருத்துவ முறையைச் சந்தேகிப்பவர்கள் அவர்களிடம் பேசி அறியட்டும். குணமடைந்த வயதானவர்களைக் கேட்கட்டும். நோயாளிகள் குணமடைவது குறித்து அரசே ஆய்வு செய்ய வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ள பெரும்பாலானோர் அலோபதி மருத்துவம் எடுத்திருந்தால், அவர்களுக்குத் திடீரென சித்த மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படாதா?

நிரீழிவு உள்ளிட்ட இணைநோய்களுக்கு அவர்கள் ஏற்கெனவே எடுக்கும் மருந்துகளைத் தொடர்ந்து எடுக்க அறிவுறுத்துகிறோம். நிலவேம்புக் கசாயம், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றைக் கொடுக்கும்போதே முறையற்ற நீரிழிவு ஒருவாரத்தில் ஓரளவுக்குள் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனுடன் சித்த மருத்துவத்தை அளிக்கும்போது பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. கீமோதெரபி எடுத்துக்கொண்டிருந்த புற்றுநோயாளி ஒருவருக்குக் கரோனா ஏற்பட்டது. அவருக்கும் இங்கு சிகிச்சை அளித்தோம். அவருக்கும் எல்லோருக்கும் கொடுக்கும் சிகிச்சை தான்.

காய்ச்சல், மூச்சுத்திணறல் என அவரவர்களுக்கான பிரச்சினைகளுக்குத் தனித்தனியாக சிகிச்சை அளிக்கிறோம். கொடுக்கப்படும் மருந்துகளின் அளவுகள்தான் மாறுபடும். சித்த மருத்துவத்தை எடுக்கும்போது 500 பேரில் ஒருவருக்கு வாயுத்தொல்லை, வயிற்று எரிச்சல், உடம்பு சூடாகுதல் போன்றவை ஏற்படலாம். இவை சாதாரண பக்கவிளைவுகள்தான். 2 நாட்களில் சரியாகிவிடும்.

சித்த மருத்துவத்தில் கரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன?

கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம், ஆடதொடா இலை கசாயம், கற்பூரவல்லி ரசம், வேப்பம்பூ ரசம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு ஏற்ப பிரம்மானந்த பைரவ மாத்திரை (காய்ச்சல்), தாளிசாதி மாத்திரை (தொண்டைப் பிரச்சினை) , சுவாச குடோரி (சுவாச மண்டலப் பிரச்சினைகள்) மாத்திரைகளை அவர்களின் இணைநோய்களின் தன்மைக்கேற்ப அளவுகளைக் கண்காணித்து வழங்குகிறோம். இவையனைத்தும் பல ஆண்டுகளாக அரசு சித்த மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் நிரூபிக்கப்பட்ட மாத்திரைகள்தான்.

கரோனா பாசிட்டிவாக இருந்தாலும் வீட்டிலேயே கபசுரக் குடிநீரை மருந்தாக நினைத்துப் பொதுமக்கள் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளும் அபாயம் இருக்கிறதே?

அப்படிச் செய்வது மிகப்பெரிய தவறு. நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதற்காகவே இதனைப் பயன்படுத்துகிறோம். நோயைக் குணப்படுத்துவதற்காக அல்ல. சிகிச்சை முறைகள் வேறு. சுய மருத்துவம் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய சிக்கலில் முடியும்.

இந்தச் சிகிச்சை முறைகளில் எந்த இடங்களிலும் நவீன மருத்துவத்தை சித்த மருத்துவர்கள் நாடவில்லையா?

அதிகபட்சமாக காய்ச்சலுக்கு பாரசிட்டமால், அசித்ரோமைசின் (ஆண்ட்டி பயாட்டிக்) உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட அவசரப் பிரச்சினைகளுக்கு என்ன சிகிச்சைகளைக் கொடுக்கிறீர்கள்?

வென்டிலேட்டர் வசதி போன்றவை இந்த மருத்துவ முறையில் தேவைப்படாது. செயற்கை ஆக்சிஜன் இங்கு வழங்கப்படுவதில்லை. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 83-84 எனக் குறைவாக இருந்தவர்களையும் மாத்திரையின் மூலம் குணப்படுத்தி அனுப்பியிருக்கிறோம். இயற்கையாகவே அவர்கள் குணமடைந்துள்ளனர். செயற்கை ஆக்சிஜன் வசதி தேவைப்படாத அளவுக்குச் சிகிச்சை அளிக்கிறோம்.

நவீன மருத்துவமனையில் வயது வித்தியாசம் இல்லாமல், இணை நோய்கள் இல்லாமலேயே உயிரிழப்புகள் நேரிடும்போது சித்த மருத்துவத்தில் நோயாளிகள் குணமடைவது எப்படி?

நவீன மருத்துவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் உயிரிழப்புகளே இருக்காது. இளம் வயது மரணங்கள் தவிர்த்திருக்க வேண்டியவை.

நாங்கள் கொடுக்கும் மருந்துகளில் என்னென்ன மூலக்கூறுகள் உள்ளன, எப்படி நோயாளிகள் குணமடைகின்றனர் என்கின்ற ஆராய்ச்சியை தேசிய சித்த மருத்துவமனையின் மூத்த சித்த மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் முடிவுகளின்படியே, நோயாளிகள் எப்படிக் குணமாகின்றனர் என்பதை விளக்க முடியும்.

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறும் போலி சித்த மருத்துவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அவர்கள் வியாபார நோக்கில் செய்கின்றனர். இத்தகைய மருத்துவர்களாலும் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுப்பவர்களாலும்தான் சித்த மருத்துவமே வெளியே தெரியாமல் இருந்தது. அதனால்தான் ஆங்கில மருத்துவத்தை மக்கள் நாடினர். போலி மருத்துவர்களை ஆரம்பத்திலிருந்தே களையெடுத்திருக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் எப்போதும் ஆண்மைக்குறைவு குறித்தே பேசி சித்த மருத்துவத்தை அரசும் அதிகாரிகளும் ஏளனமாக நினைக்கும் அளவுக்கு உருவாக்கிவிட்டனர். இப்போது மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

மூலிகை மருத்துவம் மட்டும்தான் சித்த மருத்துவமா?

எத்தனையோ பஷ்பங்கள், செந்தூரங்கள் இருக்கின்றன. மக்கள் அதனைத் தாமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவற்றைப் பொதுவெளியில் சொல்வதில்லை. கரோனாவை ஹைட்ராக்சிகுளோரோகுயின் குணப்படுத்தும் என்று சொன்னால், அதனைப் பயந்துகொண்டு தாமாக மக்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். நாம் (சித்த மருத்துவர்கள்) ஒன்று சொன்னால் நம் மருத்துவம் தானே எனக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவர். இதனால், பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும். மருத்துவர்கள் பரிசோதித்து எடுத்துக்கொள்ள வேண்டியவை அந்த மருந்துகள். மக்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

கரோனாவைத் தடுக்க பொதுமக்களுக்கு என்ன அறிவுரை கூற நினைக்கிறீர்கள்?

90 கிலோவுக்கு அதிகமாக எடை உள்ளவர்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். கரோனா அறிகுறி வந்தவுடன் பரிசோதித்து சிகிச்சையை மேற்கொள்வதுதான் நல்லது. மூச்சுத்திணறல் வந்தவுடன் சிகிச்சைக்கு வருவது தவறு. ஒருநாள் கபசுரக் குடிநீர், ஒருநாள் நிலவேம்புக் கசாயம் உள்ளிட்டவற்றைப் பருகலாம். மழைக்காலம் என்பதால் இதனைப் பழக்கமாக்கிக்கொள்ளலாம். முடிந்தவரை பாரம்பரிய உணவுகள், இஞ்சி, மஞ்சள், மிளகு சேர்த்த உணவுகளை உட்கொள்ளுங்கள். புளி சார்ந்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ராஜஸ்ரீ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x