Published : 15 Jul 2020 06:30 PM
Last Updated : 15 Jul 2020 06:30 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மற்றும் மலை மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்த மாவட்டங்கள் விவரம்:

கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) பகுதியில் 7 செ.மீ. மழை பெய்தது.

துவாக்குடி (திருச்சி), மதுரை, கடலூர், மஞ்சளாறு (தஞ்சாவூர்) வத்தளை அணைக்கட்டு (திருச்சி) தலா 6 செ.மீ., கோவிலாங்குளம் (விருதுநகர்), மன்னார்குடி (திருவாரூர்), திருத்துறைப்பூண்டி (நாகப்பட்டினம்), தலனாயர் ( நாகப்பட்டினம்) பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பெய்தது.

வலங்கைமான் (திருவாரூர்), லால்பேட்டை (கடலூர்) காட்டுமன்னார் கோவில் (கடலூர்), சிறுகுடி (திருச்சி), கோவில்பட்டி (திருச்சி), பொன்மலை (திருச்சி) பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்தது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜூலை 15-ம் தேதி (இன்று) ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் கூடும்.

ஜூலை 16-ம் தேதி அன்று குஜராத் மற்றும் மகாராஷ்ரா கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூலை 16-ம் தேதி அன்று கேரளா மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூலை 15 மற்றும் 16-ம் தேதிகளில் வடகிழக்கு மற்றும் மத்தியக் கிழக்கு கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூலை 15 முதல் ஜூலை 18-ம் தேதி வரை கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் அன்றைய தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x