

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் இளைஞரை தாக்கியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் பகுதியைs சேர்ந்தவர் ராஜாசிங். இவர், ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சாத்தான்குளம், தந்தை மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹோமா இவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது தன்னையும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக தாக்கியதாக ராஜாசிங் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜாசிங் புகார் குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சாத்தான்குளம் போலீஸாருக்கு, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹோமா உத்தரவிட்டார்.
அதன்பேரில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் சாத்தான்குளம் போலீஸார் 323, 342, 506 (1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.