

தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 17-ம் தேதியன்று குடும்பத்தினருடன் கடலில் இறங்கித் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து வஜ்ரா வாகனத்துடன் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சுருக்குமடி வலை தொடர்பாக மீனவர்களுக்குள் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதால் கடலில் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து போய் விடுவதாகக் குற்றம் சாட்டும் இதர வலை மீனவர்கள், அந்த வலைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.
தமிழக அரசும், உயர் நீதிமன்றமும் சுருக்குமடி வலைக்குத் தடை விதித்துள்ள போதிலும் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் சாதாரண வலை மூலம் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்புக் காட்டுவதால் அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமுல்லைவாசல் மீனவர்களுக்கும், கீழமூவர்க்கரை மீனவர்களுக்கும் இடையே இது தொடர்பாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைக் கவனித்த மீன்வளத் துறையினர் விழித்துக் கொண்டு, சுருக்குமடி வலையைப் பயன்படுத்திப் பிடிக்கப்படும் மீன்களை வாகனங்களுடன் பறிமுதல் செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுருக்குமடி வலை மீனவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று போராட்டத்தில் இறங்கினார்கள். சாதா வலை மீனவர்களும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே.நாயர் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசி விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று சமாதானப்படுத்தினார். அதைத் தொடர்ந்து போராட்டங்கள் ஓய்ந்துள்ளன. இருந்தாலும் போலீஸார் மீனவ கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நேற்று சுருக்குமடி வலை மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.
அரசால் சுருக்குமடி வலைக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டால் ஜூலை 17-ம் தேதி வெள்ளிக்கிழமை பழையார் முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள் அந்தந்த மீனவ கிராமங்களில் உள்ள கடலில் குடும்பத்தோடு இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனால் மீனவ கிராமங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 11 கூடுதல் காவல் கண் காணிப்பாளர்கள், 25 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 46 காவல் ஆய்வாளர்கள், 190 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது.