

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் வழங்கக்கோரி தாக்கலான மனுவுக்கு மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துரை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த பூபதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
முதுகுளத்தூர், கடலாடி,கமுதி போன்ற தாலுகாவில் 600-க்கும் மேற்பட்ட ஆதி திராவிடக் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தாலுகாவில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தேவையான மானியம் பெற்று தருவது, அரசு கடனுதவி பெற்றுத் தருவது போன்று உதவிகளை செய்து வருகிறோம்.
கடந்த 2009 -ல் விவசாய நிலங்களில் மோட்டார் வசதியுடன் ஆழ்துளை கிணறு அமைக்க 43 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் நூறு சதவீத மானியம் பெற்று தரப்பட்டது. தற்போது 177 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் ரூ.10 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே 177 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க முழுமையான மானியத் தொகை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.