மயிலாடுதுறை மாவட்டத்துக்கான தனி அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

லலிதா ஐஏஎஸ்
லலிதா ஐஏஎஸ்
Updated on
2 min read

மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரியும் காவல் கண்காணிப்பாளரும் இன்று மயிலாடுதுறையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மயிலாடுதுறையைத் தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டத்தை அமைக்கக் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. மாவட்ட எல்லைகளை உருவாக்க ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், சென்னையில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில் அதைக் கட்டுப்படுத்த அங்கு ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனால் மாவட்டம் உருவாக்கும் பணிகள் பாதியில் நின்றன. இதனையடுத்து ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக மாற்று அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய மாவட்டத்தின் தனி அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் என்பவரையும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்ரீ நாதா என்பவரையும் நியமனம் செய்து கடந்த 12-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவர்கள் இருவரும் இன்று காலை மயிலாடுதுறையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி லலிதா பொறுப்பேற்றுக் கொண்டு பணிகளைத் தொடங்கினார். தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தவர் அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைப் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். அத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவும் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிகமாகக் கண்காணிப்பாளர் அலுவலகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

ஸ்ரீ நாதா
ஸ்ரீ நாதா

பணியேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ நாதா, "மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவேன். சட்டம் -ஒழுங்கைப் பாதுகாப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். அரசு காட்டியுள்ள வழிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தால் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்றார்.

தனி அதிகாரியும், காவல் கண்காணிப்பாளரும் பணியேற்றுக் கொண்டதன் மூலம் மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகாலக் கனவு நிறைவேறியுள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மயிலாடுதுறை மக்கள், புதிய மாவட்டத் தொடக்க விழாவையும் உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அவ்விழாவில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in