Published : 15 Jul 2020 05:03 PM
Last Updated : 15 Jul 2020 05:03 PM

3 பேர் குழு பரிந்துரை செய்தால் மட்டுமே கரோனா பணியில் மருத்துவர்களுக்கு விலக்கு: மதுரை அரசு மருத்துவமனையில் புதிய நடைமுறை 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வயது முதிர்ந்த, நோய் பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ‘கரேனா’ பணியில் விலக்கு அளிக்கக் கேட்டால் அவர்கள் மருத்துவச் சான்றை ஆய்வு செய்து விலக்கு அளிக்கலாமா? வேண்டாமா? என்பதை பரிந்துரை செய்ய 3 பேராசிரியர்கள் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு பரிந்துரை செய்தால் மட்டுமே மருத்துவர்களுக்கு இனி ‘கரோனா’ பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

தமிழகத்தில் நேற்று வரையில் ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 451 ஆக உயர்ந்தது. இதில், மதுரையில் மட்டும் 6 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 450 பேர் பாதிக்கப்பட்டளனர். தொடர்ந்து பரவல் விகிதம் மடைதிறந்த வெள்ளம்போல் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் மற்ற ‘கரோனா’ சிகிச்சை மையங்களில் பணியாற்றுவதற்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதற்கிடையில் 50 வயதிற்கு மேலான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் தங்கள் உடல் நலகுறைவுகள், நிரந்தரமாக இருக்கும் நோய்களைக் காரணம் காட்டி ‘கரோனா’ வார்டு பணியில் இருந்து விலக்கு அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

அனைவருக்குமே இந்தப் பணியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றாலும் உண்மையாகவே நோய் பாதிப்பு மற்றும் தொந்தரவுகளுடன் பணியாற்றுவோருக்கு இந்த ‘கரோனா’ வார்டு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியமானது.

அதனால், மருத்துவமனை நிர்வாகம், ‘கரோனா’ வார்டில் பணியில் இருந்து விலக்கு கோரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் விண்ணப்பங்களையும், அவர்கள் மருத்துவ சான்றுகளையும் ஆய்வு செய்து அவர்களுக்கு விலக்கு அளிக்கலாமா? வேண்டாமா? என ‘டீன்’னுக்கு பரிந்துரைக்க 3 பேராசிரியர்கள் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு முன், ‘கரோனா’ வார்டு பணியில் இருந்து விலக்கு கோரும் மருத்துவர்கள், தங்கள் பாதிப்பு தொடர்பான மருத்துவச் சான்று விவரங்களை சமர்பிக்க வேண்டும். அந்த குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரித்து, அவர்கள் நோய் தொந்தரவுகள், பாதிப்புகள் உண்மையாக இருந்தால் ‘டீன்’னுக்கு விலக்கு அளிக்க பரிந்துரை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘இது நல்ல முடிவுதான். ஆனால், மதுரையில் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்களுக்கு மட்டும் எந்த அடிப்படையில் ‘கரோனா’ வார்டு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டும் வார்டுபணியில் இருந்து விலக்கு அளித்துவிட்டு உண்மையாகவே நோயுடன் போராடுவோரை பணியில் இருந்து விலக்கு அளிக்க மருத்துவக்குழு முன் ஆஜராக செய்து பல கெடுபிடிகளை மருத்துவமனை நிர்வாகம் கையாளுகிறது, ’’ என்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘கரோனா’ பணியில் யாருக்கும் பாராபட்சம் காட்டப்படவில்லை. பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்களுக்கும் கரோனா பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளிட்ட கரோனா’ பணியில் ஈடுபட்டால் எளிதாக பாதிக்கப்படுவார்கள் என்றாலோ, வேறு தவிர்க்க முடியாத நோய் தொந்தரவுகள் இருந்தாலோ அவர்களை இந்த 3 பேர் குழு ஆய்வு செய்து விலக்கு அளிக்க எனக்கு பரிந்துரை செய்வார்கள். இல்லாவிட்டால் அவர்கள் விண்ணப்பப்படும் நிராகரிக்கப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x