

மன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ மன்னை மு.அம்பிகாபதி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 83.
மன்னை மு.அம்பிகாபதி, இளம் வயதில் அரசியல், மேடைப்பேச்சு மட்டுமின்றி நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார். இவர் 1954-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும் பதவி வகித்தார். 1964 - 69 காலக்கட்டத்தில் மன்னார்குடி நகர மன்ற உறுப்பினராகவும். இந்திய - சோவியத் கலாச்சார கழக தலைவராகவும் பதவி வகித்தவர்.
மறைந்த தலைவர் ஜீவா மீது கொண்ட பற்றுதலால் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அரசியல் எல்லைகளைத் தாண்டி எம்ஜிஆர், மு.கருணாநிதி, சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், கே.டி.கே.தங்கமணி, ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன் ஆகியோரோடு நெருங்கிய நட்புறவில் இருந்தவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் செயலாளராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
1969-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் பங்கேற்றார். தஞ்சை மாவட்ட விவசாய சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார்.
1971-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நில மீட்பு முயற்சி போராட்டத்தில் பங்கேற்று கடுங்காவல் தண்டனை பெற்றார்.
1975-ல் நுகர்பொருள் வாணிபக் கழகம் உருவாக்கக் கோரியும், 1976-ல் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபத் தொழிற்சங்கம் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க அமைப்புகள் தொடங்கிட முன்னோடியாக விளங்கினார்.
எழுத்தாளர், பேச்சாளர், நாடகக் கலைஞர் என்று பன்முக ஆற்றல் மிக்கவர். கம்பன் கழகம், மகாகவி பாரதியார் நற்பணி மன்றம் ஆகியவற்றின் தலைவராகச் செயல்பட்டு தஞ்சையில் பாரதியார் சிலை அமைத்தவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்தோ சோவியத் நட்புறவு கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 1977, 1980 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தவர். தமிழ்நாடு சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.
தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மிதிவண்டியில் இருவர் செல்ல அனுமதி, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேசி சட்ட வடிவமாக்கியவர்.
கடந்த ஒருசில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, மன்னார்குடி பகுதியில் மட்டும் சிறுசிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த மன்னை அம்பிகாபதி உடல்நலக்குறைவு காரணமாக வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்த நிலையில் 83 வயதான அம்பிகாபதி, வயது முதிர்வு காரணமாக நேற்றிரவு (ஜூலை 14) உயிரிழந்தார்.
மறைந்த மன்னை மு.அம்பிகாபதிக்கு கோமளவள்ளி, லீலாவதி என்ற இரண்டு மனைவிகளும் 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மகன் பாரதி, தஞ்சை மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 15) அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மன்னை மு.அம்பிகாபதி, தனது 83-வது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராகி காவிரி டெல்டா விவசாயிகளின் கம்பீரமான குரலாக விளங்கிய அவர், சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணியாற்றினார். ஏழை எளியவர்களுக்காக, அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைத்தவர்.
கருணாநிதியின் உற்ற பொதுவுடைமைத் தோழர்களில் ஒருவராக, மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்த அவர் நல்ல பேச்சாளர், சிறந்த எழுத்தாளர். கம்பன் கழகத்தில் ஈடுபாட்டுடன் பொதுவுடைமைக் கொள்கையின் அடையாளத்துடன் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்காகத் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்ட மன்னை மு.அம்பிகாபதியின் மறைவு பொதுவுடைமை இயக்கத்தின் தோழர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள ஏழை - எளிய மக்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் மனைவி, மகள் ஆகியோருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.