

கரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கியிருக்கும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியும், மடிக்கணினியில் பாடங்களைப் படிக்க வசதியாக வீடியோவில் பதிவேற்றும் பணியும் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 10 மற்றும் 11-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பள்ளிகளைத் திறக்கும் எண்ணம் தறோதைக்கு இல்லை எனத் தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளுக்கான பாடநூல்களை ஜூலை 15 (இன்று) வழங்குவதாக அறிவித்திருந்தார்.
மேலும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் மடிக்கணினியைப் பள்ளிக்கு கொண்டுவந்து அதில் டிஜிட்டல் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இதற்கு முன்னேற்பாடாக 2020- 21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம் சார்பாக கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.
பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடர்பான வழிமுறைகள்
* ஜூலை 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கற்பிக்கும் வகுப்பு ஆசிரியர்கள் வருகை புரிந்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடநூல்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கும்போது மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பாடப் புத்தகங்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பாக, பிரிவுகளாக புத்தகங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கும் வகையில் புத்தகங்களைப் பிரித்து அவர்களை வரவழைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றி புத்தகங்கள் வழங்க வேண்டும்.
*பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும்போது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியைக் கொண்டு வருமாறும் அதில் அனைத்துப் பாடங்கள் வீடியோவில் ஹைடெக் மூலம் பதிவேற்றம் செய்து தர வேண்டும்.
* விவரங்கள் உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் உள்ள சர்வர், யூபிஎஸ், இன்டர்நெட் இருப்பதை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* அனைத்து அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் ஜூலை 13 மற்றும் ஜூலை 14 ஆகிய நாட்களில் தங்கள் பள்ளியின் அனைத்துப் பாட முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்து தங்கள் படங்களுக்கு வீடியோ பாடங்கள் ஹைடெக் லேபில் உள்ள கணினிகளில் பதிவிறக்கம் செய்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர் வாரியாக பிரித்துக் கட்டிவைக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* மாணவர்களுக்குப் பாடநூல்கள் வழங்கும்போது கையெழுத்துப் பெறுவதை பள்ளிகள் தயார் செய்து வைத்தல் வேண்டும்.
* பன்னிரண்டாம் வகுப்பு அனைத்து மாணவ மாணவிகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளின் பேட்டரியை ரீசார்ஜ் செய்து அவருடைய பெயரை மடிக்கணினியில் ஒட்டி தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும்.
* பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடநூல்கள் வழங்கக் கூறும் நாட்களில் அவர்களை மடிக்கணினியுடன் பிரிவு வாரியாக பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களிடமிருந்து மடிக்கணினிகளை ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டு ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும்.
* முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கு உரிய மடிக்கணினியில் உரிய அனைத்துப் பாடங்களின் வீடியோக்களை காப்பி செய்து தர வேண்டும்.
* ஒவ்வொரு மாணவனுடைய மடிக்கணினியில் மொழிப்பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டனர். தகுந்த இடைவெளியுடன் அவர்கள் அமர்த்தி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மடிக்கணினியில் பாடங்கள் பதிவு செய்யப்பட்டு, புத்தகங்களுடன், பாடங்கள் பதிவேற்றப்பட்ட மடிக்கணினிகளை வழங்கும் பணி இன்று தொடங்கி நடந்து வருகிறது.
சென்னையில் 260 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் உள்ளன. அரசு விதிமுறைகள்படி புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஜிட்டல் பாடங்களைத் தரவிறக்கம் செய்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவியர் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து அளிக்கப்படுகிறது.
மேலும், ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.