

மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் சங்கரய்யா. அயராத உழைப்புக்கும், நேர்மைக்கும் வாழும் உதாரணமாகத் திகழும் அவருக்கு இன்று 99-வது பிறந்தநாள்.
கரோனா தொற்றுக் காலம் என்பதால், வாழ்த்துச் சொல்ல தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் சங்கரய்யாவைக் காண நேரில் செல்ல வேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பதால், இணையம் மூலம் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் இளந்தலைமுறையினர்.
அவரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய 11 தகவல்கள்:
1. மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யா,1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா, தன் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யாவானது!
2. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் சங்கரய்யாவுக்கு பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டியவர். 1941-ல் போராட்டக் கனல் மதுரையையும் பற்றியது. பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா கைதானார். படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது.
3. 1942-ல், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டத்தின்போது நெல்லையில் பல்வேறு கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினார் சங்கரய்யா. அப்போது தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் இருந்த காலத்தில் காங்கிரஸார் பலரை கம்யூனிஸ்ட்டுகளாக்கியவர்.
4. 1943-ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளரானார். கட்சியை வளர்க்க பல உத்திகளைக் கையாண்டார். மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கரகாட்டக் கலைஞர் பொன்னுத்தேவரை ஆட வைப்பார். கூட்டம் சேர்ந்ததும் கட்சிக் கொள்கைகளை விளக்கிப் பேசுவது அவற்றில் ஒரு உத்தி. கலை, இலக்கியத்தில் மிக அதிக ஆர்வம் கொண்ட சங்கரய்யாதான், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்க வேண்டும் என்ற யோசனையைச் சொன்னவர்.
5. கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியை திருமணம் (1947 செப்டம்பர் 18) செய்துகொண்டார் சங்கரய்யா. நவமணியின் சகோதரரும், சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால் குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார். 75 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், நூற்றுக்கணக்கான சீர்திருத்த, சாதி மறுப்புப் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார்.
6. 1948 முதல் 3 ஆண்டுகள் தலைமறைவுக் காலம். இந்தியாவில் எங்கெங்கெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தார் என்று பட்டியல் போட்டால் அது நீளும். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலை. பின்னாளில் எதற்கும் கலங்காதவராக நிற்க இந்தப் பயணமும் ஒரு காரணம்.
7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கையில், ‘ஜனசக்தி’ இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார் சங்கரய்யா. 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ இதழ் தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதி வந்த சங்கரய்யா, 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியராக உயர்ந்தார்.
8. 1957 தேர்தலில் முதன் முறையாக மதுரை கிழக்குத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் சங்கரய்யா. 1962-லும் தோல்வி. 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன் முறையாக வெற்றி பெற்றார். அடுத்தடுத்து நடந்த 1977, 1980 தேர்தல்களிலும் (மதுரை கிழக்கு) அவர் வென்றார். சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன.
9. சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார் சங்கரய்யா. 1998-ல், கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை (1998) நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகளும், தேச பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில், தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார்.
10. கட்சியில் இரும்பு மனிதர் என்ற பெயர் சங்கரய்யாவுக்கு உண்டு. ஆனால், சங்கரய்யாவைக் கலங்க வைக்கும் பாடலும் உண்டு. டி.மணவாளன் எழுதிய ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே, தோழா’ பாடலைக் கேட்டால் கட்சித் தோழர்களின் தியாகத்தை நினைத்து அழுது விடுவார்.
11. மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இருவர் மட்டுமே இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் கேரளத்தின் வி.எஸ்.அச்சுதானந்தன், மற்றொருவர் சங்கரய்யா. கட்சியின் அன்றாடப் பணிகளிலிருந்து ஒதுங்கிவிட்டாலும், அவரது கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பண்பான நடத்தை ஆகியவற்றால் இன்றைக்கும் எண்ணற்ற இளையோரை வசீகரிக்கிறார், வழிகாட்டுகிறார் சங்கரய்யா.