Published : 15 Jul 2020 10:33 AM
Last Updated : 15 Jul 2020 10:33 AM

கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்; ராமதாஸ்

கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டிலுள்ள 4,700-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும், அவற்றின் கிளைகளிலும் நகைக்கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் கைகளில் பணப்புழக்கமின்றி, தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் கடன் பெறுவதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் மூடப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தின் மீது மிக மோசமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று 125-வது நாளை எட்டியிருக்கிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் மக்களைக் காக்கும் எண்ணம் கொண்டது என்றாலும் கூட, அதன் பொருளாதார பக்க விளைவுகள் மிகவும் மோசமானவை.

கரோனா வைரஸ் பரவலால் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அமைப்பு சார்ந்த தொழில்துறைகளில் பணியாற்றுபவர்கள் அனைவரும் ஊதியத்துக்கும், உத்தியோகத்துக்கும் உத்தரவாதம் பெற்றவர்கள் என்ற மாயை நொறுங்கியிருக்கிறது. அமைப்புசார்ந்த தொழில்துறையில் பணியாற்றுவோரில் பல லட்சம் பேர் ஊதியக் குறைப்புக்கு ஆளாகியுள்ளனர். பல்லாயிரம் பேர் வேலைகளை இழந்து வாடுகின்றனர்.

அமைப்புசார்ந்த தொழில்துறையினரின் நிலை இதுவென்றால், அமைப்புசாரா தொழில்துறையினரின் நிலைமை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இன்று வரையிலான 125 நாட்களில் 125 ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியாத குடும்பங்கள் ஏராளம். அப்படிப்பட்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பேருதவியாக திகழ்வது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் நகைக்கடன்கள் தான்.

தமிழ்நாட்டில் ஒரு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 128 நகரக் கூட்டுறவு வங்கிகள், 114 நகர கூட்டுறவு சங்கங்கள் என 4,716 அமைப்புகள் மற்றும் அவற்றின் கிளைகள் என 5,000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகள் மூலம் நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதத்தில் தொடங்கி ஜூலை மாதத் தொடக்கம் வரை சென்னையில் மட்டும் ரூ.250 கோடிக்கும், தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாகவும் நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே தமிழக மக்களின் பணத்தேவையை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய சூழலில் எந்த அடிப்படையில் நகைக் கடன்களை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசின் சார்பில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குறுஞ்செய்தி மூலம் ஆணையிட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு நகைக்கடன் தேவைப்படும் காலமே இது தான். மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் குறுவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி, ஆள் கூலி என வாரத்திற்கு ஒரு முறையாவது கணிசமான தொகை தேவைப்படும்.

அதேபோல், தனியார் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் கல்விக் கட்டணத்தை கண்டிப்பாக செலுத்தியாக வேண்டும் என்று கெடுபிடி காட்டி வரும் நிலையில் அதற்காக பெற்றோருக்கும் பணம் தேவைப்படும். அவ்வாறு பணம் தேவைப்படும் அனைவருக்கும் ஒரே ஆதாரமாக திகழ்வது கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் நகைக்கடன்கள் தான். கிராமப்புற ஏழைகள், விவசாயிகளின் உயிர்நாடியாக திகழும் நகைக்கடனை நிறுத்தி வைப்பது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

கூட்டுறவு வங்கிகளுடன் ஒப்பிடும் போது பொதுத்துறை வங்கிகளில் இன்னும் குறைவான வட்டியில் நகைக்கடன் கிடைக்கும். ஆனால், அவற்றில் நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையானவை. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான விதிகள் எளிதானவை.

அதுமட்டுமின்றி, கூட்டுறவு வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் நமது அமைப்புகள் என்று மக்கள் நினைப்பதால் இரு தரப்புக்கும் இடையிலான பந்தம் வலிமையானது. தமிழக அரசின் புதிய நகைக்கடன் ரத்து அறிவிப்பு அந்த பந்தத்தை தகர்த்து விடக் கூடும். அவ்வாறு நடந்தால் அதன்பின் கூட்டுறவு சங்கங்களுக்கும், மக்களுக்கும் இடையிலான உறவை ஒட்ட வைக்க முடியாது. அது கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தாகி விடும் என்பதை தமிழக கூட்டுறவுத்துறை உணர வேண்டும்.

தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் நகைக்கடன் உள்ளிட்ட புதிய கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அடுத்த இரு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் நகைக்கடன் என்பது தவிர்க்க முடியாத அங்கம் ஆகும். இதை உணர்ந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்கும்படி கூட்டுறவுத்துறைக்கு முதல்வர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x