Published : 15 Jul 2020 06:49 AM
Last Updated : 15 Jul 2020 06:49 AM

நியோவைஸ் வால்மீன் எப்போது எங்கே எப்படி பார்க்கலாம்?

கடந்த மார்ச் மாதத்தில் சூரியனை நோக்கி வேக வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தசி/2020 எப்3 (C/2020 F3) எனும் வால் நட்சத்திரம், அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவில் சூரியன் மறைந்த பிறகு மாலையில் வடமேற்கு அடி வானில் தென்படும்.

கடந்த 2009-ல் விண்வெளிக்கு ஏவப்பட்ட நாசாவின் நியோவைஸ் (Neowise) என்ற விண்கலம்தான், இந்த வால்மீனை முதன் முதலில் கடந்த 2020 மார்ச் 27 அன்று இனம்கண்டது. பூமிக்கு அருகே வரும் வால்மீன், விண்பாறைகள் முதலிய வான் பொருட்களை, நியோவைஸ் விண்கலத்தின் தொலைநோக்கி கண்காணித்து இனம் காணுகிறது.இதுவரை சுமார் 35,000 விண் பொருட்களைஇனம் கண்டுள்ளது. எனவே பேச்சு வழக்கில் சி/2020 எப்-3 என்ற இந்த வால்மீனை நியோவைஸ் என அழைகின்றனர்.

தப்பிப் பிழைத்தது

தரையில் இருந்து உயரத்தில் இருக்கும் தலை மீது ஏற்படும் ஈர்ப்பு விசை குறைவாகவும், தரையை தொடும் கால் மீது ஏற்படும் ஈர்ப்பு விசை சற்றே கூடுதலாகவும் இருக்கும். இதனால் நமக்கு ஆபத்து ஏதுமில்லை. ஆனால், சூரியன் போன்ற பெரும் ஈர்ப்பு ஆற்றல் கொண்டுள்ள பொருட்களின்அருகே தலைக்கும் காலுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை வித்தியாசத்தின் காரணமாகப் பொருட்கள் நீட்சி அடையும். இழுவை விசை காரணமாகச் சில நேரம் உடைந்தது போகலாம். இவ்வாறுதான் இந்தஆண்டு இந்த வால்மீனுக்கு முன்னர் அட்லாஸ் மற்றும் ஸ்வான் என்ற 2 வால்மீன்கள், சூரியனுக்கு அருகே நெருங்கிய போது சுக்குநூறாக உடைந்து போயின.

மார்ச் மாதம் இனம் காணப்பட்ட நியோவைஸ், சூரியனுக்கு பின்புறம் அருகாமை புள்ளியை 2020 ஜூலை 3 அன்று கடக்கும் எனக் கணித்திருந்தனர். அந்த நாள்நெருங்க நெஞ்சு படபடக்கக் காத்திருந்தனர். சூரியனுக்கு பின்புறம் என்பதால் என்னநடக்கிறது என்பதை பூமியில் இருந்து காண முடியாது. சூரியனை நெருங்கி வலம் வரும் சோலார் பார்கர் விண்வெளி தொலைநோக்கி, ஜூலை 5-ம் தேதி வால்மீனை புகைப்படம் எடுத்து நியோவைஸ் தப்பி பிழைத்து விட்டதை உறுதி செய்த போது நிம்மதி பெருமூச்சு எழுந்தது.

சூரியனுக்கு அருகே 4.3 கோடி கி.மீ. தொலைவில் கடந்து, அடுத்த சில நாட்கள் கடந்த பின்னர் உடையாமல் சிதையாமல் வால்மீன் வெளிப்பட்டது. சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றும் இந்த வால்மீன், வரும் ஜூலை 23 அன்று பூமிக்கு அருகே கடந்து செல்லும். பின்னர் மெல்ல மெல்ல சூரிய மண்டலத்தை விட்டு அகன்று வெகுதொலைவு செல்லும்.

இருட்டில் சற்று நேரம்

சூரியனுக்கு அருகே கிழக்கு முகமாக வால்மீன் இருப்பதால், பகலிலும் இரவிலும் காண முடியாது. சூரியன் மறைந்த பின்னர் இருட்டில் சற்று நேரம் வரை இந்த வால்மீனை காண முடியும். ஜூலை 16 முதல் மாலை சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு திசையில் அடிவானத்தில் இது தென்படும். மாலை சுமார் 7:20 மணிக்கு சூரியன் மறையும். சூரியன் மறைந்த பின்னரும் பல நிமிடங்கள் அடிவானத்தில் ஒளி பிரகாசிக்கும். மங்கலான வால்மீன், இந்த ஒளியில் எளிதில் தென்படாது. சூரிய அஸ்தமனத்துக்கு அரைமணி நேரம் கடந்த பின்னர் சுமார் 8 மணியளவில் கூடுதல் தெளிவாக பார்க்கலாம்.

ஜூலை 16 முதல் 21-ம் தேதி வரை வெறும் கண்களுக்கு மங்கலாகக் காட்சி தரும். ஜூலை 19-ம் தேதி சற்றே கூடுதல் பிரகாசத்துடன் தென்படும். பைனாகுலர் இருந்தால் ஜூலை மாதம் முழுவதும் பார்க்கலாம். அருகே பிரகாசமான விளக்கு ஏதுமில்லாத இருட்டில் தான் தென்படும் என்பதால், தெருவிளக்கு போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். அடிவானம் என்பதால் மேக மூட்டம், தூசு படலம் முதலியனவும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும். நகர்ப்புறங்களை விடக் ஒளி மாசு குறைவாக உள்ள கிராமங்களில் மேலும் கூடுதல் பொலிவுடன் காட்சி தரும்.

வால்மீன் என்பது என்ன?

மையக்கரு அதிலிருந்து வெளிப்படும் வால், இதுதான் வால் விண்மீனின் அமைப்பு. அகச்சிவப்பு கதிர் புகைப்பட கருவி கொண்டு, நியோவைஸ் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்தபோது வால்மீனின் மையத்தில் வெறும் 5 கி.மீ. விட்டம் உடைய கல், மண், பனிப்பாறை கலந்த கலவை கரு இனம் காணப்பட்டது. இது என்ன?

அடுக்குமாடி குடியிருப்புக் கட்டி முடிந்த பின்னர், அந்த இடத்தில் உடைந்த செங்கல், திட்டுத் திட்டாகச் சிமென்ட், கான்கிரீட், காலி பெயின்ட் டப்பா எல்லாம் இரைந்துகிடப்பது போல, சுமார் 460 கோடி ஆண்டுகள் முன்னர் உருவான சூரிய குடும்பத்தில் சூரியன், கோள்கள், துணைக்கோள்கள் எல்லாம் உருவாகிய பின்னர், எஞ்சிய பொருட்களே வால்மீன்கள். வால்மீன்களை ஆராய்வது மூலம் சூரிய குடும்பத்தின் பிறப்பு குறித்து அறியலாம்.

இரட்டை வால்

வால்மீன்களுக்கு எப்போதும் வால் இருக்காது. சூரியனில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் போது வெறும் கல், மண், பனிக்கட்டி கலந்த கலவை பிண்டமாகத்தான் இருக்கும். சூரியனுக்கு அருகே இருக்கும் போது மட்டுமே வால்மீனுக்கு வால் பிறக்கிறது. சூரியனில் இருந்து ஒளி மற்றும் வெப்பம் வெளிப்படுகிறது. இந்த வெப்பத்தில் ஆவியாகும் பொருட்கள் மற்றும் இலகுவான தூசுகளை மென்மையாகச் சூரிய ஒளி உந்தும் போது வால் பிறக்கிறது.

வால்மீனுக்கு ஒன்றல்ல இரண்டல்ல 3 வால்கள் இருக்கும். வெப்பம், ஒளி தவிர சூரியனில் இருந்து நாலாபுறமும் சூரிய காற்று எனப்படும் மின்னேற்ற துகள்கள் நொடிக்கு 400 கி.மீ. என்ற வேகத்தில் வீசிக் கொண்டிருக்கும். வால் விண்மீனில் ஏற்படும் அயனி பொருட்கள் மின்னேற்ற துகள்களால் உந்தப்பட்டு சூரிய காற்று வீசும் திசையில், அதாவது சூரியனுக்கு எதிர் திசையில் அயனி வால் உருவாகும். சூரியனுக்கு அருகே உள்ள போது தூசு நிறைந்த வால் மற்றும் அயனி வால் வெறும் கண்களுக்கு மயிலின் தோகை விரித்ததுபோலத் தென்படும். இந்த 2 வால்கள் தவிர3-வதாக சோடிய அணுக்களைக் கொண்டுள்ள 3-வது வால் ஒன்றும் உருவாகிறது எனச் சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளனர்.

எப்போது திரும்பும்?

சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு போல 544 மடங்கு தொலைவில் இருந்து இந்த முறை இந்த வால்மீன் சூரியனை நோக்கிய தன் பயணத்தைச் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. சூரியனுக்கு பின்புறமாக வலம் வந்து மறுபடி விண்வெளிக்கு செல்கிறது. வரும் ஜூலை 23 அன்று சுமார் 10. 3 கோடிகி.மீ. தொலைவில் பூமிக்கு நெருக்கமாக வரும். அப்போது நிலவின் தொலைவை விடச் சுமார் 400 மடங்கு அதிக தொலைவில் தான் செல்லும். சூரியனை விட்டு மெல்ல மெல்ல விலகிச் செல்லும் வால்மீன்,பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு போல 720 மடங்குத் தொலைவை அடைந்து மறுபடி சுமார் 6,800 ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடி பூமியை அடையக் கூடும் என வானவியலாளர்கள் கணித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x