

திருச்சி சிந்தாமணி சந்தை கடைகளை காலி செய்வதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் கடை உரிமம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சிந்தாமணி சந்தையில் கடை நடத்தி வரும் சாமிதுரை, சந்திரபிரபா, ஜெயராஜ் உள்ளிட்ட 13 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
சிந்தாமணி சந்தையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சித்தாமணி சந்தையை மேம்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடையை காலி செய்யுமாறு எங்களுக்கு திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேலாண்மை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு வியாபாரிகளிடம் கருத்து கேட்கவில்லை.
மதுரை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் ஏற்கெனவே கடை நடத்தி வருவோருக்கு மாற்றிடம் ஒதுக்கவும், புதிதாகக் கட்டப்படும் கடைகளை ஒதுக்கும் போது பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே சிந்தாமணி சந்தையில் கடை நடத்தி வரும் எங்களுக்கு மாற்றிடம் வழங்கவும், அதுவரை கடைகளை காலி செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிந்தாமணி சந்தையில் கடை வைத்திருப்பவர்களில் உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர், உரிமம் இல்லாதவர்கள் எத்தனை பேர், உரிமம் பெற்றவர்கள் முறையாக வாடகை செலுத்துகிறார்களா?
என்பது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.