மத்திய அரசின் புதிய அறிவிப்பால் குறு தொழில்களுக்குப் பாதிப்பு: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு புகார்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரம்புகளை மாற்றி அமைத்துள்ள மத்திய அரசின் புதிய அறிவிப்பு, குறு, சிறு தொழில்களை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:

"குறு தொழில்களுக்கு ரூ.25 லட்சமும், சிறு தொழில்களுக்கு ரூ.5 கோடியும் முதலீடாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு ரூ.1 கோடி முதலீடு, ரூ.5 கோடி உற்பத்தி சார்ந்தவை குறு தொழில்கள் என்றும், ரூ.10 கோடி முதலீடு, ரூ.50 கோடி வரையிலான உற்பத்தியை சிறு தொழில்கள் எனவும், ரூ.50 கோடி முதலீடு, ரூ.250 கோடி உற்பத்தி செய்யும் நிறுவனங்களை நடுத்தர நிறுவனங்கள் என்றும் புதிதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, குறு, சிறு தொழில்களின் அடையாளங்களை இழக்கச் செய்யும். ஏற்கெனவே, உத்யோக் ஆதார் அடிப்படையில், காட்டேஜ் எனப்படும் ஊரக குறுந்தொழில்களின் அடையாளம் அழிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் முதலீடுகள் மாற்றத்தால், குறு, சிறு தொழில்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் முதலீடு மற்றும் உற்பத்தி அளவுகளை மாற்றியமைக்க வேண்டும்.

குறு தொழில்களுக்கு ஒரு கோடி முதலீடு, ரூ.5 கோடி உற்பத்தி என்றும், சிறு தொழில்களுக்கு ரூ.5 கோடி முதலீடு, ரூ.10 கோடி உற்பத்தி என்றும், காட்டேஜ் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் முதலீடு, ரூ.1 கோடி ரூபாய் வரை உற்பத்தியளவு என்றும் நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், குறு, சிறு தொழில்களுக்குத் தனி அமைச்சகத்தையும் மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதன் மூலம், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உரிய மானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். மேலும், பொதுத் துறை நிறுவனங்களின் உதிரி பாகங்களுக்கான கொள்முதலில் 50 சதவீத ஆர்டர்களை சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்"

இவ்வாறு ஜே.ஜேம்ஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in