

கரோனா நோயிலிருந்து மீண்டாலும் அந்த நோயாளிகளிடம் இருந்து நோய் அறிகுறி தோன்றிய நாளிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு ‘கரோனா’ தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘கரோனா’ தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அவரவர் தொந்தரவுகளுக்கான மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சத்தான உணவுகள் சாப்பிட்டாலே இந்த நோயிலிருந்து நோயாளிகள் மிக எளிதாக மீண்டு விடுகின்றனர்.
அதனால், மதுரை மாநகராட்சிப்பகுதியில் தற்போது தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்ல விருப்பமில்லாமல் வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப்பெறுவதிலே ஆர்வப்படுகின்றனர்.
ஆனால், அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதை மருத்துவ நிபுணர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நோயாளிகளே முடிவு செய்து விடக்கூடாது என்று நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குின்றனர்.
அதுபோல், ஒரு நோயாளி ‘கரோனா’வில் இருந்து மீண்டாலும் அறிகுறி அறியப்பட்ட நாளில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்கு அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸை பரவக்கூடும் அபாயம் இருப்பதால் அவர்கள் கண்டிப்பாக தோற்று உறுதி செய்யப்பட்ட அல்லது இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொடர் தும்மல் உள்ளிட்ட அறிகுறி கண்டறியப்பட்ட நாளில் இருந்து 2 வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.இளம்பரிதி கூறியதாவது:
அறிகுறி இல்லாத அல்லது காய்ச்சல், தொண்டை வலி, வறட்டு இருமல் மற்றும் உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு வீட்டு பராமரிப்பில் மருத்துவக்குழு கண்காணிப்பில் சிகிச்சைப்பெறலாம்.
ஆனால், அவர்கள் உடல்நிலை திடீரென்று மோசமடைவதற்கான ஆபத்து மிகுந்த சுகாதாரத்துறை பட்டியலிடப்பட்ட எந்த நோய்களும் அவர்களுக்கு இருக்கக்கூடாது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிகுறியில்லாமல் கரோனா தொற்று நோய் இருந்தாலும் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சைப் பெறுவதே சிறந்தது.
ஒரு நோயாளியை ஒரு மருத்துவர் நேரடியாக மதிப்பீடு செய்யாமல் வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் இருக்கும் நோயாளிகள் தேவைப்பட்டால் மருத்துவர் அனுமதியளித்தால் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சைப்பெறலாம். ஆனால், நோயாளியைப் பார்த்த பிறகு இந்த முடிவை மருத்துவர்கள் செய்ய வேண்டும்.
ஒரு நோயாளியை வீட்டு பராமரிப்புக்கு அனுமதித்தால் அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தேவையான பாராசிட்டமால் மாத்திரை, இருமல், சளி, தொண்டவலியை கட்டுப்படுத்தும் மருந்துகள், திரவ ஆகாரங்கள் போதுமான அளவு வைத்திருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட வசதிகள் பெற்றிருக்க வேண்டும். Pulse Oximeter மருத்துவ உபகரணம் வீட்டு பராமரிப்பில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு மிக முக்கியத் தேவையானது.
இது ஒரு நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை கண்டுபிடிக்க உதவும். நோயாளியின் ரத்ததில் இருக்கும் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சைப்பெற வேண்டும்.
ஒரு நோயாளி தனது அறிகுறிகளிலிருந்து மீண்டிருந்தாலும் அறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து அவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் அந்த தனிமைப்படுத்தப்பட்ட சுகாதாரத்துறை நிர்ணயித்த வரை வெளியே வரக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.