

புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் அளிப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனியாருக்கு ஆலையை அளிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் புதுச்சேரி அரசுக்கு எதிராக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
புதுச்சேரி லிங்கா ரெட்டிப்பாளையத்தில் 1984-ல் மாநில அரசால் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆரம்பிக்கப்பட்டது. ஆலை தொடக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆலையில் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கினர். சிறந்த லாபத்தில் இயங்கி வந்த இந்த ஆலை நாட்டின் 2-வது சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக விளங்கியது.
கடந்த 2000-ம் ஆண்டு காலகட்டம் வரை லாபத்தில் இயங்கியது. பல்வேறு காரணங்களால் அதன்பின்னர் ஆலை நலிவடையத் தொடங்கியது. இதனால் விவசாயிகளுக்கு அவர்கள் அனுப்பிய கரும்புகளுக்கு சரிவரப் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. அதுபோல் தொழிலாளர்களுக்கும் சம்பளம் சரியாக தரப்படவில்லை. சிறந்த ஆலை எனப் பெயர் பெற்ற இந்த ஆலை தற்போது மோசமான நிலையை வந்தடைந்துள்ளது. மில் தற்போது ரூ.123 கோடிக்கு மேல் நஷ்டத்தில் உள்ளது.
கரோனா சூழலில் புதுச்சேரி அரசின் லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு கூட்டுறவு சர்க்கரை ஆலையை தற்போது உள்ள கடன் சுமையோடு 20 ஆண்டு காலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் அடிப்படையில் நடத்துவதற்குத் தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் இ-டெண்டர் கலந்துகொள்ள அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவுக் கருத்தரங்கு கூடத்தில் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்பட்டுள்ள நஷ்டம், மீட்பு நடவடிக்கைகள், தனியாரின் விருப்பம் குறித்து அதிகாரிகள் தெரிவித்து விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டனர்.
அப்போது பேசிய விவசாயிகள் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
விவசாயிகள் பேசும்போது, " சிறிய மாநிலத்தில் கூட்டுறவு ஆலையை நடத்த முடியாவிட்டால் விவசாயம் எப்படிச் செய்ய முடியும்? சர்க்கரை ஆலையை ஏன் நடத்தக்கூடாது? ஆலையில் மொலாசிஸ் தயாரித்து எரிசாராயம் விற்பனை செய்யலாமே? இப்படிச் செய்தால் வெளியிலிருந்து சாராயம் வாங்குவதில் கமிஷன் கிடைக்காமல் போய்விடும் என நினைக்கிறீர்களா? அரசு நினைத்தால் ஆலையைத் திறம்பட நடத்த முடியும்" எனத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டு அத்தொகுதி எம்எல்ஏ டி.பி.ஆர். செல்வம் கூறுகையில், "கூட்டுறவு சர்க்கரை ஆலையை 20 ஆண்டு காலம் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் உள்நோக்கம் உள்ளது. ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்து விளம்பரம் செய்துவிட்டு தற்போது விவசாயிகளை அழைத்து எதற்காகப் பேசுகிறீர்கள்? விவசாயிகளை ஏமாற்றுவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறதா? விவசாயிகளுக்கு உரிய மதிப்பளியுங்கள். தொடர்ந்து விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றி வருகிறது" எனப் பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கருத்துகளை விவசாயிகள் தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் விவசாயிகளிடையே கருத்து மோதலும் ஏற்பட்டது. இறுதியில் விவசாயிகளின் கருத்தை அரசிடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இக்கூட்டத்தில் கூட்டுறவுச் செயலாளர் அசோக்குமார், மேலாண்மை இயக்குநர் யஷ்வந்தையா, மேலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.