

திண்டுக்கல் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் இருவர், மகளிர் எஸ்.ஐ., மற்றும் ஒரே தெருவை சேர்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து திண்டுக்கல் நகரில் கரோனா தொற்று மீண்டும் தீவிரமடையத்தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் நகரில் கரோனா தொற்று தொடக்கத்தில் அதிகம் இருந்தநிலையில் பின்னர் முற்றிலும் குறைந்தது. தற்போது நேற்றைய பரிசோதனை முடிவுகளில் ஒரே நாளில் திண்டுக்கல் நகரில் உள்ள பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆட்சியருடன் ஆய்வுப்பணிக்கு சென்றுவந்த நேர்முக உதவியாளர், முகாம் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சியருக்கு பாதிப்பு இல்லை என சோதனைமுடிவில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ., ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. கோபால்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் செவலியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மூடப்பட்டது.
திண்டுக்கல் காளிமுத்துபிள்ளை சந்து பகுதியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அந்தப்பகுதி தடுப்புக்கள் வைத்து மூடப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் ரேணுகாதேவி சந்து பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஆனந்தகிரி, காந்திபுரம், அண்ணாநகர் பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவர் உயிரிழந்தனர். இதையடுத்து திண்டுக்கல் நகரில் மீண்டும் கரோனா தொற்று தீவிரமடையத்தொடங்கியுள்ளது.