

ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஒருவர், தன்னுடைய மகள் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 4 தலைமுறைகளைக் கண்ட மூதாட்டிக்கு 13 பிள்ளைகள். இவர்களில் 12 பேர் தற்போது உயிருடன் இல்லை. இவருடைய மகளும், பேத்தியும் கணவரை இழந்தவர்கள்.
வாழ்வாதாரத்துக்காக ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் மூதாட்டியின் பேத்தி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், மூதாட்டிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமாகி இன்று (ஜூலை 14) அவர் வீடு திரும்பினார்.
மூதாட்டிக்குக் கரோனா நோய்த்தொற்று இருந்ததால் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யும்படி கூறியதாகத் தெரிகிறது. மேலும், இவருடைய பேத்தி தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் கரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தால் அவரை வேலைக்கு வர வேண்டாம் எனத் தொழிற்சாலை நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மூதாட்டியின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. இவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை தர வேண்டுமென பல ஆண்டுகளாக ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தற்போது வாழ வழியில்லாமல் மூதாட்டி தன் மகள் மற்றும் பேத்தியுடன் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் அவர்களுடைய வீட்டுக்குச் சென்று அந்த குடும்பத்திற்கு ரூ.5,000, ஒரு மூட்டை அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார். மேலும், முதியோர், கணவரை இழந்தோருக்கான உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.