Last Updated : 14 Jul, 2020 08:09 PM

 

Published : 14 Jul 2020 08:09 PM
Last Updated : 14 Jul 2020 08:09 PM

தூத்துக்குடியில் இறந்த முதியவருக்கு கரோனா தொற்று: இறுதிச் சடங்கில் 400 பேர் பங்கேற்பு- எம்எல்ஏ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவரது சடலத்தை உறவினர்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர். இதில் சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், தூத்துக்குடி எம்எல்ஏவும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவை சேர்ந்த 81 வயது முதியவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை கரோனா முன்சிகிச்சை வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் திடீரென இறந்தார். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு அவரது உடலை உடனே ஒப்படைக்கக் கோரி தகராறு செய்துள்ளனர். கரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகே உடலை ஒப்படைக்க முடியும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தகராறு செய்யவே சடலத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த முதியவர் உடலுக்கு இன்று காலையில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முதியவருக்கான கரோனா பரிசோதனை முடிவு இன்று காலை வந்தது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், அதற்குள் உடலை இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் ஊர்வலமாக தூத்துக்குடி சிதம்பரநகர் மையவாடிக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இறுதி சடங்கில் சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர். அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அவருக்கு கரோனா தொற்று என்ற விவரத்தை அறிவித்தனர். இதனால் பாதிபேர் அங்கிருந்து சென்றுவிட்டனர். உறவினர்கள் அவரது உடலை எரியூட்டிவிட்டுச் சென்றனர்.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு ஏதேனும் கரோனா அறிகுறி ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரவேண்டும் என ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக எம்எல்ஏவிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதியவர் வீடு இருந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மற்றும் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x