

பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் உரிமையைப் பறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுக்கோட்டை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் அவர்களது கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே ஆதிக்கம் காட்டுவதாகவும், கையெழுத்தைக்கூட இவர்களே போட்டுக்கொள்வதாகவும் அரசுக்குப் பொதுமக்களிடம் இருந்து அடுத்தடுத்துப் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
மேலும், பெண் பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்படும் அரசு வாகனம் மற்றும் அவர்களது பதவியைத் தங்களுக்குச் சொந்தமான கார்களில் எழுதிக்கொண்டு வலம் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டமும் விதிவிலக்கல்ல.
இந்நிலையில், இதுகுறித்து புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி இன்று (ஜூலை 14) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி பெண் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்பட அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இது தொடர்பான புகார்கள் குறித்து18004 259013, 04322 222171 ஆகிய எண்களில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம். பெண்களின் உரிமையைப் பறிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.