

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மங்கள இசையால் ரசிகர்ககளை மயக்கிய நாதஸ்வர கலைஞர் கரோனாவில் தன் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க சப்பாத்தி வியாபாரம் செய்து வருகிறார்.
திருப்பத்தூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பிரபுசங்கர். இவர் திருத்தளிநாதர் கோயிலில் நாதஸ்வரம் வாசித்து வருகிறார். மங்கள இசை வாசித்து வந்த இவரது வாழ்க்கை கரோனாவால் திசை மாறியது.
ஊரடங்கால் கோயில் விழாக்கள், திருமணம் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் தொழில் வாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கினார்.
யாரிடமும் நிவாரண உதவி கேட்க மனமில்லாமல் இருந்த அவருக்கு சப்பாத்தி வியாபாரம் கைகொடுத்தது. அவரது குடும்பத்தினர் உதவியோடு சப்பாத்தி மற்றும் குருமா செய்து வீதிகளில் விற்பனை செய்து வருகிறார்.
தற்போது வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் 200-க்கும் மேற்பட்ட சப்பாத்திகளை விற்பனை செய்கிறார். ஒரு சப்பத்தியை ரூ.10-க்கு விற்கிறார்.
இதுகுறித்து நாதஸ்வர கலைஞர் பிரபுசங்கர் கூறியதாவது: நாங்கள் மூன்று தலைமுறையாக கோயிலில் நாதஸ்வர இசை வாசித்து வருகிறோம். கரோனாவால் வாழ்க்கை பாதையே மாறிவிட்டது. விழாக்கள், சுபநிகழ்ச்சிகள் இல்லாததால் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்டேன்.
இதனால் எங்களுக்கு தெரிந்த சப்பாத்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடன் வாங்காமல் குடும்பத்துடன் உழைத்து வருகிறோம். நல்ல லாபம் கிடைக்கிறது. நிம்மதியாக உள்ளோம், என்று கூறினார்.
செய்யும் தொழில் எதுவானாலும் கடின உழைப்பால் வாழ்வாதாரத்தை மீட்ட நாதஸ்வர கலைஞர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.