தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் மதுரையில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும்: ஆட்சியர் டி.ஜி.வினய் நம்பிக்கை
மதுரையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் நோய்த் தாக்குதல் படிப்படியாக குறையும் என ஆட்சியர் டி.ஜி.வினய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 300-க்கும் மேல் உள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து ஆட்சியர் கூறியதாவது:
ஆரம்பத்தில் கரோனா பரிசோதனை செய்பவர்கள் எண்ணிக்கை 1,000, 1,500 என்றிருந்த நிலையில் தற்போது பரிசோதனை எண்ணிக்கை 4 ஆயிரம்வரை உயர்ந்துள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை உயர்வாக இருப்பது வெளியே தெரிகிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப கூடுதலாக 5 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.
3 கல்லூரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை வசதி ஏற்படுத்தியுள்ளோம். பல்கலைக்கழகம் எதிரில் உள்ள ஐடி பூங்காவில் 1,000 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும். மேலும் சில கல்லூரிகளில் இடவசதி குறித்து ஆய்வு நடக்கிறது.
காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தினசரி 160 இடங்களில் மாவட்டம் முழுவதிலும் நடக்கிறது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கும் மேல் பரிசோதிக்கப்படுகின்றனர்.
இங்கு வருவோருக்கு கபசுரகுடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. காய்ச்சல் உள்ளோர் உடனே சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த 43 ஆயிரம் பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 12,208 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு பணிகளுக்காக 2 ஆயிரம்பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறையினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். தனது தாயாரை கரோனாவிற்கு பறிகொடுத்த மருத்துவரே விடுமுறை எடுக்காமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது கரோனா தொற்று பாதிப்போர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வந்தாலும், இனி வரும் நாட்களில் இதைவிட அதிக எண்ணிக்கையில் குணமான நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
மேலும் அறிகுறி இல்லாத, கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள், தனிமைப்படுத்தும் வசதி உள்ளோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு மாத்திரை, ஆலோசனைகளைத் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா பாதித்தாலும் சரியான அணுகுமுறை இருந்தால் குணமடையலாம் என்பதையும், பயம் கூடாது என்பதையும் விளக்கி, ஊக்கப்படுத்தி வருகிறோம். இதற்காக தனியாக ஆலோசனை மையம் செயல்படுகிறது.
கிராமம் முதல் மாநகர் வரையில் பலகட்டமாக தடுப்புp பணிகள் மேற்கொள்ளப்படுவது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும். மக்கள் ஒத்துழைப்புடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.
