Published : 14 Jul 2020 05:40 PM
Last Updated : 14 Jul 2020 05:40 PM

வியாபாரிகளால் கொத்தமல்லிக்கு இத்தனை விலையா?- கோவை மக்கள் வேதனை

கரோனா காலத்தில் உணவுப் பொருள் விலையேற்றம் இருப்பதுதான், ஆனால், வழக்கமாக நாம் வாங்கும் கொத்தமல்லிக் கட்டுகூட அதிக விலை வைத்து விற்கப்படுகிறது, 50 கிராம் கொத்தமல்லியையே ரூ.10 கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் கோவை மக்கள்.

காரமடை வட்டாரத்தில் கொத்தமல்லி பயிரிடுபவர்கள் அதிகம். குறிப்பாக, வெள்ளியங்காடு, பாரப்பாளையம் கிராமத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 100 ஏக்கருக்கும் குறையாமல் கொத்தமல்லி பயிரிடுகிறார்கள். கொத்தமல்லி ஏன் இவ்வளவு விலை வைத்து விற்கப்படுகிறது என்று அவர்களிடம் விசாரித்தோம்.

“என்ன சொல்கிறீர்கள்? இந்த சீசனில் கிலோ ரூ.60-க்குப் போக வேண்டிய கொத்தமல்லியை வெறும் ரூ.10-க்குத்தான் எங்களிடமிருந்து வாங்கிச் செல்கிறார்கள். கடைகளில் இத்தனை விலை வைத்து விற்க எப்படி மனம் வருகிறது அவர்களுக்கு? அதுமட்டுமல்ல, தேங்காய், தட்டப்பயிறு, கத்திரிக்காய், தக்காளி எல்லாமே இப்படித்தான் பாதி, கால்வாசி ரேட்டுக்கு எடுத்துப் போகிறார்கள் வியாபாரிகள். மார்க்கெட்டுக்குப் போகும்போது அது மூன்று மடங்கு, நான்கு மடங்கு விலை கூடிப்போகிறது. அந்தக் காசெல்லாம் இடைத்தரகர் கைக்கே செல்கிறது” என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் மூர்த்தியிடம் பேசினோம்.
“வழக்கமாக இந்த சீசனில் தக்காளி 25 கிலோ கொண்ட கூடையை ரூ.1,000-க்கு எடுப்பார்கள். இப்போ ரூ.500-க்கும் குறைவாகவே வாங்குகிறார்கள். இவ்வளவு குறைவா விலை கேட்கிறீர்களே என்று கேட்டால், ‘வேன், பஸ் இல்லை. சந்தை இல்லை. எடுக்கறதுக்கு, இறக்கறதுக்கு ஆள் வரலை. ரொம்ப கட்டாயப்படுத்தி ஆட்களை கூட்டீட்டு வர்றதுக்குக் கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கு’ என வியாபாரிகள் கதை சொல்கிறார்கள்.

நாங்கள் நேரடியாகப் போய் சந்தையில விற்கலாம் என்றால் கரோனாவால் சந்தைகளும் இல்லை. அப்படியே சாலையோரம் போட்டு விற்றாலும், பாதி வாடிப் போய்விட்டால் யார் காசு கொடுப்பது? அதனாலதான் வந்த விலைக்குத் தள்ளி விடுகிறோம்.

பொதுவாக மார்ச் 15 தொடங்கி மே-15 வரைக்கும் கொத்தமல்லி விதைத்தாலும் பயிர் வராது. அந்த அளவு கோடை வெயில் வாட்டும். அதேபோல் செப்டம்பர் - ஜனவரி பனிக்காலம் அப்போதும் கொத்தமல்லி பெரிதாகத் துளிர்க்காது. இதற்கு இடைப்பட்ட சீசனில்தான் இது வரும். ஒரு ஏக்கருக்கு எப்படிப் பார்த்தாலும் 6 டன் கொத்தமல்லி கிடைக்கும். எந்த ஒரு விவசாயியும் தன்னிடம் இரண்டு ஏக்கர் இருந்தால் அதில் அரை ஏக்கரில் கொத்தமல்லி போடுவது இங்கே உள்ள வழக்கம். 45 நாள் பயிர். அதனால மற்ற செலவுகளுக்கு எளிதாக இந்த விவசாயம் கை கொடுக்கும்.

ஒரு கிலோ ரூ. 60-க்கு உறுதியாகப் போகும். அதிலும் தண்ணி இருந்து செப்டம்பர்- ஜனவரியில் பயிர் செய்தால் கிலோவுக்கு ரூ.200 கூட கிடைக்கும். ஒரு ஏக்கர் போட்டால் ரூ. 4 லட்சம் எடுக்கலாம். பனிக்காலத்தில் கொத்தமல்லியை அதிக விலைக்கு விற்பது போல் கரோனா காலத்தைக் காரணம் காட்டி இப்போதும் அதிக விலைக்கு விற்கிறார்கள் வியாபாரிகள். அவர்கள் அப்படியே விற்றாலும் எங்களுக்காவது உரிய விலையைக் கொடுக்கலாமே?” என்றார்.

இதுகுறித்துக் கோவை மார்க்கெட்டைச் சேர்ந்த கொத்தமல்லி வியாபாரி ஒருவரிடம் பேசியபோது, “கொத்தமல்லியை ஒரு நாள் வைத்திருந்தாலே காய்ந்து போய்விடும். எப்படிப் பார்த்தாலும் பாதியைக் கழிக்க வேண்டி வரும். ஏற்றும் போதும், இறக்கும் போதும்கூட நசுங்கிக் கழிவுகள் சேரும். அதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் விலை வைக்கிறோம். இப்போது மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. சாம்பார், ரசம், பொறியல் வகையில எதை தவிர்க்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள். பாதிப் பேர் காய்கனி வாங்கவே வர்றதில்லை. மீதிப் பேர் வந்தாலும் கொத்தமல்லி ரேட்டைக் கேட்டுவிட்டு வாங்காமலேயே போய்விடுகிறார்கள்” என்றார்.

இந்த நேரத்தில் விவசாயிக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஒரு நியாயமான இணைப்பை அரசு அதிகாரிகள் ஏற்படுத்தினால்தான் இந்த விலை உயர்வைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள். சமீபத்தில், குறைகேட்க வந்த வேளாண் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்கள் குறைகளைச் சொன்னார்களாம். அவர்களோ, “இந்தக் காலகட்டத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. தேவை என்றால் உழவர் குழுவுக்கு ரூ.1.50 லட்சம் மானியக் கடன் தருகிறோம்” என்று மட்டும் சொல்லிச் சென்றுள்ளனராம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x