

காங்கிரஸில் கோஷ்டிப்பூசலால்தான் சட்டப்பேரவையைக் கூட்ட முடியவில்லை. கட்சியின் கோஷ்டிப்பூசலை மறைக்க இனியும் அரசு நிர்வாகத்தில் தேக்க நிலையை உருவாக்கினால் சட்ட வல்லுநர்களின் கருத்தினைக் கேட்டு மக்கள் நலனுக்காக அதிமுக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடந்த பத்து ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்து வருகிறது. அப்போது நான்கு மாத செலவுக் கணக்குக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு அதன்பிறகு ஜூலையில் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்.
அதேபோல் இம்முறையும் கடந்த மார்ச் மாதத்தில் ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. அதைத் தொடர்ந்து ரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யத் திட்டமிட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியது. இன்னும் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைக்காத சூழலே நிலவுகிறது. இதனால் புதுச்சேரி அரசே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இதுதொடர்பாக இன்று (ஜூலை 14) கூறியதாவது:
"புதுச்சேரியில் மார்ச் இறுதியில் பட்ஜெட் போட அனைத்து சாதகமான சூழ்நிலை இருந்தும் பட்ஜெட் போடவில்லை. அதற்கான துறை நிதியான கூட்டங்களையும் நடத்தவில்லை.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடத்தப்பட வேண்டுமே என்பதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் நடத்தாமல் முதல்வர் விட்டுவிட்டார். மூன்று மாத செலவினங்களுக்கான சட்டப்பேரவை அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், இன்னமும் பட்ஜெட் கூட்டமும் நடத்தப்படவில்லை. அரசின் அன்றாடப் பணி செலவுக்காக சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறப்படாததால் அரசு நிர்வாகம் செய்வதறியாது உள்ளது.
காலம் கடந்தும் இக்காலத்திற்கு ஏற்புடைய வருவாய் இல்லாத சூழ்நிலையில் அதிக நிதி கொண்டு பட்ஜெட் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பியது அரசின் திட்டமிட்ட நாடகமாகும்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல், அமைச்சர்களுக்குள் ஒற்றுமையின்மை, ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தனித்தனி கருத்துகள் ஆகியவற்றால் சிக்கித்தவிக்கும் அரசால் சட்டப்பேரவையைக் கூட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை மறைக்க அரசு நாடகம் ஆடுகிறது.
அரசின் உதவி பெறும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அரசின் அன்றாட அத்தியாவசிய செலவினங்கள் செய்வதைக் கருத்தில் கொண்டும் ஏன் ஒரு நாள் சட்டப்பேரவையைக் கூட்ட அரசு முன்வரவில்லை ?
தனது ஆட்சியின் உச்சக்கட்ட கோஷ்டிப் பூசலினால் வழக்கம்போல் சட்டப்பேரவையைக் கூட்ட முடியாதவர்கள் எதையாவது கூறி திசை திருப்பி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு, மக்களையும் வஞ்சித்துக் கொண்டு வருகின்றார்கள். தங்களின் கட்சியின் கோஷ்டிப் பூசலை மறைக்க இனியும் அரசு நிர்வாகத்தில் தேக்க நிலையை உருவாக்கினால் சட்ட வல்லுநர்களின் கருத்தினைக் கேட்டு மக்கள் நலனுக்காக அதிமுக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்".
இவ்வாறு அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.