

கரோனா தொற்று பரவல் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை ஏழு நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்திலுள்ள பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்று. கோயம்பேடு, பரவை காய்கறிமார்க்கெட்கள் மூலம் கரோனா பரவல் அதிகமடைந்ததையடுத்து பல கட்டுப்பாடுகளுடன் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் இயங்கிவந்தது.
காய்கறி மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், கமிஷன் கடை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கமிஷன் கடை உரிமையாளர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து காய்கறிமார்க்கெட்டை மூட முடிவுசெய்யப்பட்டது. இருந்தபோதும் காலை முதலே மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டுவரப்பட்டதால்
இவற்றை விற்பனை செய்து வெளியூர்களுக்கு அனுப்பாவிட்டால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதால் மாலைவரை காய்கறிமார்க்கெட் செயல்பட்டு பின்னர் மூடப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக இன்று (ஜூலை 15) முதல் ஜூலை 21 ம் தேதி வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை என, மார்க்கெட் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் வெளியூர்களுக்கு விற்பனைக்காக மொத்தமாக காய்கறிகளை வாங்கிச்செல்வது பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பழநியிலுள்ள காந்தி காய்கறிமார்க்கெட்டில் கடைவைத்துள்ள ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து மார்க்கெட் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.