

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களில் தேங்காய் காய்க்காததால் மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றனர்.
கடந்த 2018-ல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் இருந்த தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. புயலையும் எதிர்கொண்டு தோப்புகளில் ஆங்காங்கே எஞ்சிய மரங்களில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான மரங்களில் தேங்காய் விளைச்சல் இல்லை.
காய்ப்புத் திறன் இல்லாத மரங்களுக்கு பெருந்தொகை செலவிட்டுப் பராமரித்தும்கூட பிரயோஜனம் இல்லை என்பதால் தென்னை மரங்களை விவசாயிகளே வெட்டி அழித்து வருகின்றனர்.
ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் தனது 5 ஏக்கரில் இருந்த சுமார் 500 தென்னை மரங்களில் புயலுக்கு எஞ்சிய அனைத்து மரங்களுமே காய்க்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தென்னை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு அனுப்பப்படுகின்றன.
ஊரடங்கில் காய்கறிகள், பலா, வாழை போன்ற விளைபொருட்களுக்கும் கட்டுப்படியான விலை இல்லாத நிலையில், தென்னையும் உதவாதது விவசாயிகளுக்குப் பேரிடியானது.
இதுகுறித்து கொத்தமங்கலம் தென்னை விவசாயி டி.வளர்மதி கூறும்போது, "ஏக்கருக்கு சராசரி 100 தென்னை மரங்கள் வீதம் 5 ஏக்கரில் இருந்த தென்னை மரங்களில் இருந்து 2 மாதங்களுக்கு 1 முறை சுமார் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.
புயலுக்குப் பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. எஞ்சிய மரங்களில் இருந்து ஆண்டுக்கு 100 தேங்காய்கூட காய்க்கவில்லை. இடுபொருட்களுக்காகப் பெருந்தொகையைச் செலவிட்டும், அடுத்தடுத்த மாதங்களிலாவது காய்க்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தும் பலனில்லை.
இதனால், காய்க்காத அனைத்து மரங்களையும் வெட்டி அழித்துவிட்டு மீண்டும் குறுகிய காலப் பயிர்களான கடலை, எள், பயறு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
இதேபோன்று, மாவட்டம் முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். இவற்றை சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து செங்கல் சூளைக்காக மரம் ரூ.300-க்கு வாங்கி ஏற்றிச் செல்லப்படுகின்றன. அதேசமயம், இந்தத் தொகையும் மரங்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அழிப்பதற்கான கூலிக்குக்கூடப் போதுமானதாக இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
நிலையான வருமானத்தைக் கொடுத்து வந்த தென்னை மரங்களும் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் கைவிட்டதால் பொருளாதார நெருக்கடியை ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.