கரோனா ஒழிப்புக்காக இதுவரை முதல்வரோ, அமைச்சர்களோ எம்எல்ஏக்களிடம் கூட கலந்து ஆலோசித்தது இல்லை; புதுச்சேரி அரசு மீது திமுக குற்றச்சாட்டு

திமுக எம்எல்ஏ சிவா: கோப்புப்படம்
திமுக எம்எல்ஏ சிவா: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா ஒழிப்பு என்பது கூட்டுப்பணி என்பதை உணராததாலேயே புதுச்சேரியில் கரோனா அதிகரித்து வருகின்றது என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இச்சூழலில் புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை கூட்டணி கட்சியான திமுக மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தெற்கு மாநில அமைப்பாளரும் எம்எல்ஏவுமான சிவா இன்று (ஜூலை 14) கூறியதாவது:

"புதுச்சேரியில் எனது தொகுதியில் உள்ள ஒதியஞ்சாலை சுகாதார நலவழி மையத்திலும் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த பரிசோதனை முகாம் குறித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான என்னிடம் தெரிவிக்கவில்லை. மேலும் இதுமாதிரி முகாம் நடைபெறுவது குறித்து மக்களிடமும் கொண்டு செல்ல உரிய வகையில் சுகாதாரத்துறை விளம்பரப்படுத்தவில்லை,

சுகாதாரத்துறையினர் கரோனா தடுப்புப்பணியை தங்கள் அலுவலகப்பணியாக கருதி, யாரிடமும் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் தாங்களாகவே செய்து வருகின்றனர். அதுவும் கரோனா தொற்று பரவலுக்கு காரணமாக இருந்து வருகின்றது.

அதுபோல் தொகுதிகளில் எவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கரோனா தொற்றை தடுக்க முடியும் என்று இதுவரை முதல்வரோ, துறை அமைச்சரோ, சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளோ எம்எல்ஏக்களிடம் பேசி, கலந்து ஆலோசித்தது இல்லை.

கரோனா ஒழிப்பு என்பது கூட்டுப்பணி என்பதை உணராததாலேயே புதுச்சேரியில் கரோனா அதிகரித்து வருகின்றது. இனிமேலாவது கரோனாவை கூட்டு முயற்சியால்தான் வெற்றி கொள்ள முடியும் என்பதை அரசும், சுகாதாரத்துறையும் உணர்ந்து செயல்பட வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in