

அரியலூரில் உள்ள பிரபல துணிக்கடை பணியாளர்கள் 20 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மே, ஜூன் மாதங்களில் சில தளர்வுகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதுடன் மளிகை, துணிக்கடைகள் திறக்கவும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், கரோனா குறித்த அச்சம் இல்லாமல் மக்கள் பலரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்காததால் கரோனா பரவல் அதிகமானது. இதனையடுத்து, ஜூலை மாதம் பேருந்துப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அரியலூரில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் சளி, காய்ச்சல் காரணமாக கடந்த 10-ம் தேதி இருவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கடை மூடப்பட்டதுடன், கடையில் பணிபுரிந்த 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை கடந்த 12-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதில், பணியாளர்கள் 20 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூலை 14) கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட கடையில் கடந்த 10 நாட்களில் துணி வாங்கியவர்கள், பணியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த.ரத்னா அறிவுறுத்தியுள்ளார்.