சாத்தான்குளம் வழக்கு: 5 காவலர்களையும் 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி- சொக்கிக்குளம் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் அனுமதி வழங்கியது.

5 பேரையும் மீண்டும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவர் முத்துராஜா ஆகியோரை முதலில் கைது செய்தனர். பின்னர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல் நிலை காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா தலைமையில் அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும், தந்தை, மகனை தாக்க போலீஸார் பயன்படுத்தி லத்தி, ரத்தக்கறை படிந்த ஆடைகள் உள்ளிட்ட தடயங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா நேற்று மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவர் முத்துராஜா ஆகியோரை நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹேமந்த் குமார் 5 பேரையும் இன்று தொடங்கி 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து 5 பேரும் உடனடியாக மதுரை சொக்கிக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in