Published : 14 Jul 2020 11:27 AM
Last Updated : 14 Jul 2020 11:27 AM

ஓசூர் எல்லையில் கூட்டமாகப் படையெடுக்கும் பெங்களூரு தமிழர்கள்: பெங்களூருவில் முழு ஊரடங்கு எதிரொலி- வாகன சோதனை தீவிரம்

ஓசூர்

கரோனா எதிரொலியாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்துக்குப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் தமிழக ஓசூர் எல்லையில் தீவிர வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரம் மற்றும் பெங்களூரு ஊரகம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசால் ஜுலை 14-ம் தேதி இரவு 8 மணி முதல் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு தொடர்ந்து 3 வாரம் அல்லது 1 மாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனை தொடர்ந்து பெங்களூரு நகரில் வசிக்கும் தமிழர்கள் இ-பாஸ் மூலமாக கார்களில் தமிழகம் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் தமிழக ஓசூர் எல்லையில் உள்ள ஜுஜுவாடி சோதனைச்சாவடிக்கு நேற்று அதிகாலையில் இருந்தே நூற்றுக்கணக்கான கார்களில் பெங்களூரு தமிழர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். சோதனைச்சாவடி முன்பு கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பெங்களூருவில் இருந்து கார்களில் வந்தவர்களிடம் உள்ள இ-பாஸ், சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு ஜுஜுவாடி சோதனைச்சாவடி ஆன்லைன் மையத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அவர்களுடைய ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஓசூர் ஜுஜுவாடி ஆன்லைன் மையத்தில் பெங்களூரு தமிழர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் இ-பாஸ் சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்யும் பணிகள் முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அவரவர் ஊர்களுக்குக் கார்களில் புறப்பட்டுச் சென்றனர்.

இதில் தமிழகம் வருவதற்கான இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல பெங்களூரு நகரில் இருந்து கால்நடையாக வருபவர்களின் வசதிக்காக தமிழக ஓசூர் எல்லை முதல் ஓசூர் நகரப்பகுதி வரை ஆட்டோக்கள் இயங்கின. இந்த ஆட்டோக்களில் செல்லக் கட்டணம் கொடுக்க இயலாதவர்கள், குறிப்பாக பெங்களூரு நகரில் இருந்து கால்நடையாகப் புறப்பட்ட தமிழர்கள், தமிழக எல்லையைக் கடந்து ஓசூர் நகரை நோக்கி நடந்து சென்ற வண்ணமாக இருந்தனர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள், வாகனங்கள் கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் எனத் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் வாகனச்சோதனை, வாகனக் கணக்கெடுப்பு, கிருமி நாசினி தெளிப்பு, இ-பாஸ் பதிவு உள்ளிட்ட பணிகளில் காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x