

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரோனா தொற்று இல்லை எனவும், அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 14) வெளியிட்டசெய்தி வெளியீடு:
"தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று (ஜூலை 13) வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, முதல்வருக்கும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது"
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.