

லாயல் டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சுவிட்சர்லாந்தின் ஹெய்க் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 3 அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய முழு கவச உடைகள் (பிபிஇ), SS95 சுவாச வகை முகக் கவசங்களை வடிவமைத்துள்ளது.
இதற்காக, பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ரிலையன்ஸின் ‘R-ELAN’ என்ற நுண்ணிழையை தேர்வு செய்துள்ளது. கரோனா உட்பட பல வைரஸ்களை 99.9% தடுக்கக்கூடிய சுவிட்சர்லாந்தின் ஹெய்க் வைரோபிளாக் எனும் முறையை பயன்படுத்தி இத்துணிகள் தயாரிக்கப்படு கின்றன. இதுதவிர, வைரஸ்களை தடுக்கும் PU மென்படலத்தை லாயல் வடிவமைத்துள்ளது.
இவ்வாறு கரோனா தொற்றுக்கு எதிராக உலகிலேயே முதல்முறையாக 3 அடுக்கு பாதுகாப்பு கவச உடையை தயாரித்துள்ளதாக லாயல் நிறுவனத் தலைவர் வள்ளி ராமசுவாமி கூறினார்.
இது சலவை செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய உலகின் முதலாவது கவச உடை என்று தலைமை தொழில்நுட்பம், வணிக மேம்பாட்டு அதிகாரி டி.தேவதாஸ் கூறினார். வைரஸ் எதிர்ப்பு டி-சர்ட், லெகிங்ஸ் கால்சட்டையும் அறிமுகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வெப்பினார் மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் லாயல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஏ.வெள்ளியங்கிரி, இயக்குநர் விசாலா ராம்சுவாமி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.