

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி. இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கு இந்த ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கோடையால் ஏரியின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீரின் அளவும் விநாடிக்கு 74 கனஅடியில் இருந்து, 54 கனஅடியாக குறைக்கப்பட்டது.
கடந்த 21-ம் தேதி கீழணையில் இருந்து மேட்டூர் தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. மேலும், கடந்த 4 நாட்களாக வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து தற்போது 42.65 அடியாக உள்ளது. இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 63 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.