காலியாக உள்ள திருவொற்றியூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தயார் நிலையில் மின்னணு இயந்திரங்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

காலியாக உள்ள திருவொற்றியூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தயார் நிலையில் மின்னணு இயந்திரங்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர் உள்ளிட்ட 3தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, கடந்த பிப்ரவரி 27-ம் தேதிஉடல் நலக்குறைவால் காலமானார். அடுத்த நாள் (பிப்.28) குடியாத்தம் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல் நலக்குறைவால் இறந்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக உறுப்பினராக இருந்த ஜெ.அன்பழகன் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த ஜூன் 10-ம் தேதி உயிரிழந்தார்.

இடைத்தேர்தல் நடத்தப்படுமா?

திமுக உறுப்பினர்களின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள்காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அங்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் இந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த ஏதுவாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனவா என்பது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் காணொலி வாயிலாக ஆய்வு நடத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, ‘‘நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய தொகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி முதல் நிலை பரிசோதனை முடித்து சரிபார்க்கப்பட வேண்டும். இதுகுறித்து கடந்த வாரம் காணொலி காட்சி மூலம் தேர்தல்ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. ஆனால், இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி குறித்து எந்த முடிவையும் ஆணையம் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in