

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும், வந்து செல்வோருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு நாட்களில் 345 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது சுகாதாரத்துறையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் நகர பகுதிகளில் மட்டும் கரோனாவினால் 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1565 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கை 10 பேராக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பணிபுரிந்த, மற்றும் வந்து சென்ற தனியார், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. அரசு, மற்றும் தனியார் மருத்துவமனையில் மட்டும் கரோனாவால் 900 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிவேகமாக கன்னியாகுமரியில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம், மற்றும் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே 15ம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், இவற்றிற்கான அனுமதி நேரத்தை மேலும் குறைப்பதற்கு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.