

புதுச்சேரியில் ஏனாம், மாஹே பிராந்தியங்களில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,724 பயனாளிகளுக்கு மருத்துவ நிவாரண நிதி தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளுக்கு 765 பேருக்கு மட்டுமே நிதி தரப்பட்டுள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர், முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், ஆந்திரத்தையொட்டி ஏனாமும், கேரளத்தையொட்டி மாஹேவும் உள்ளன. புதுச்சேரியில் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும், மாஹே, ஏனாமில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் பிஎம்ஆர்எஸ் நிறுவனம் மூலம் ஏழை மக்களுக்கு இதயம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவ நிவாரண நிதி தரப்படுகிறது. புதுச்சேரி, காரைக்காலை விட ஏனாம், மாஹே பிராந்தியத்தில் அதிக அளவிலான பயனாளிகளுக்கு இந்த நிதி தரப்பட்டுள்ளதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி தகவல்களைப் பெற்றார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
''கடந்த 2016 முதல் 2020 வரை மாஹே, ஏனாம் இரு தொகுதிகளுக்கு மட்டும் 1,724 பேருக்கு ரூ.7.54 கோடி மருத்துவ நிவாரண நிதி தரப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் தொகுதிகளில் உள்ள 28 தொகுதிகளைச் சேர்ந்த 765 பயனாளிகளுக்கு ரூ.10.65 கோடி மருத்துவ நிவாரண நிதி தரப்பட்டுள்ளது.
28 தொகுதிகளைச் சேர்ந்தோருக்கு வெறும் 765 பேருக்கும், 2 தொகுதிளில் உள்ள 1,724 பேருக்கு நிதி தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களில் மருத்துவ நிதி கோரி விண்ணப்பித்த பயனாளிகளில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் சராசரியாக நிதி தராமல் இரு பிராந்தியங்களில் உள்ள இரு தொகுதிகளுக்கு மட்டும் கூடுதலாக நிதி தரப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகம்தான் இதற்குக் காரணம்.
குறிப்பாக 2019-2020 ஆம் ஆண்டில் 23 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் வெறும் 17 பேருக்குத் தந்து விட்டு அமைச்சர் தனது தொகுதியான ஏனாமில் 124 பேருக்கும், மாஹக்கு 64 பேருக்கும் வழங்கியுள்ளதால் சந்தேகம் எழுகிறது.
ஏனாம், மாஹே பகுதிகளில் அதிக பயனாளிகளுக்கு நிதி தரப்பட்டுள்ளதால் இந்தப் பயனாளிகளுக்கு எந்த நோய்க்கு எவ்வளவு மருத்துவ நிதி தரப்பட்டுள்ளது என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன்''.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.