

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,539 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் ‘கரோனா’ தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயருகிறது. புறநகர் கிராமங்களை ஒப்பிடும்போது மாநகராட்சி 100 வார்டுகளில் இந்த நோய் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
மக்கள் நெருக்கம் மிகுதி, அதிகளவிலான பரிசோதனை போன்றவற்றால் மாநகராட்சிப்பகுதிகளில் அதிகளவில் புதிய நோயாளிகள் கண்டறியப்படுவதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை உயருவதால் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது ஒரு நாளைக்கு மதுரை மாவட்டத்தில் நோய் அறிகுறியுள்ள 3 ஆயிரம் பேருக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுவதால் தினமும் சராசரியாக 250 முதல் 350 பேர் வரை புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். நேற்று புதிய உச்சமாக
464 பேருக்கு இந்த தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 6,539- ஆக உயர்ந்தது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில், ‘‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் பரிசோதனை செய்வதற்கு 155 இடங்களில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 நடமாடும் வாகனங்களில் மருத்துவக்குழுவினர் குடியிருப்புப் பகுதிகளுக்கு மக்களைத் தேடிச்சென்று பொதுமக்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்கின்றனர்.
அதனால், பாதிக்கப்பட்டோர் அதிகமாக தெரிய ஆரம்பிக்கின்றனர். ஆனால், இந்தத் தொற்று நோயால் உயிரிழப்பு மிகக் குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் குறுகிய நாளில் மீள்வதால் இந்த நோயைப் பற்றிய அச்சம் தேவையில்லை. ஆனால், முகக்கவசம், சமூக இடைவெளி, அறிகுறியிருந்தால் பரிசோதனை செய்வதால் இந்த நோய்ப் பரவலை தடுக்க முடியும்” எனக் கூறப்பட்டுள்ளது.