டாஸ்மாக்கைத் திறந்துவிட்டு நூலகங்களைப் பூட்டி வைக்கலாமா?- அரசுக்குப் புத்தக வாசிப்பாளர் கேள்வி

டாஸ்மாக்கைத் திறந்துவிட்டு நூலகங்களைப் பூட்டி வைக்கலாமா?- அரசுக்குப் புத்தக வாசிப்பாளர் கேள்வி
Updated on
1 min read

தனிமனித இடைவெளியைக் கேள்விக்குள்ளாக்கும் டாஸ்மாக் கடைகளே திறந்திருக்கும் நிலையில், அறிவை வளர்க்கும் நூலகங்களைத் திறக்காமல் இருப்பது வாசிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பாகவே தனிமனித இடைவெளி அதிகமாகவும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் முடியாத நூலகங்களை அரசு சில கட்டுப்பாடுகளுடன் திறக்கவேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞரும் வாசிப்பாளருமான பாவேல்சக்தி ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “நூலகத்தை அறிவின் குழந்தை எனச் சொல்வார்கள். பாடப்புத்தகம் தராத பரந்த உலகத்தையும், வாழ்க்கை அனுபவத்தையும் வாசிப்பு தந்துவிடும். அதனால்தான் பலரும் நூலகத்துக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கரோனா பொதுமுடக்கம், அச்சம் ஆகியவற்றால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நூலகங்கள் மூடிக்கிடக்கின்றன. அரசு அலுவலகங்கள் பலவும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகின்றன. டாஸ்மாக்கோ நூறு சதவீதப் பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை நூலகத் திறப்பு குறித்து மட்டும் அரசு பேசவே இல்லை.

நூலகத்தின் வாசிப்பாளர்கள் பகுதியில் போடப்பட்டுள்ள நாற்காலிகள் அமைப்பே இயல்பாகவே தனிமனித இடைவெளியுடன்தான் இருக்கும். ஒருவேளை, உட்கார்ந்து வாசிக்க அனுமதிக்காவிட்டாலும் சந்தாதாரர்கள் புத்தகங்களை எடுத்துச்சென்று வாசித்து திருப்பிக் கொடுக்கவும், புதிய புத்தகங்கள் எடுத்துச் செல்லவும் மட்டுமாவது அனுமதிக்கலாமே.

பொதுவாக, ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அதை 14 நாள்களுக்குள் நூலகத்தில் திரும்பி ஒப்படைக்க வேண்டும். அதற்குள் அந்தப் புத்தகத்தை படித்து முடிக்காவிட்டால் அந்தப் புத்தகத்தையே, நேரில் நூலகத்துக்கு எடுத்துச்சென்று மேலும் 14 நாள்களுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அப்படி, நீட்டிக்காமல் உரிய நேரத்தில் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் வாரத்துக்கு 50 காசு வீதம் அபராதம் வசூலிக்கப்படும்.

இப்போதைய கரோனா சூழலை மனதில் கொண்டு அரசு இந்தத் தாமதக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. அதை வரவேற்கிறோம். அதேநேரம், புத்தகத்தைத் திரும்பப் பெற்று, வேறு புத்தகங்களை வழங்கும் பணியையேனும் நூலகத்துறை செய்யவேண்டும். இதில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மார்ச் மாதத்தில் இருந்தே நூலகங்கள் பூட்டிக் கிடப்பதால் புத்தகங்களில் பூச்சிகள் வரவும் வாய்ப்புள்ளது. இது வெயில் காலம் என்பதால் கரையான் தொல்லை இருக்காது. ஆனால், புழுக்கள் புத்தகத்துக்கு வேட்டு வைத்துவிடும் அபாயம் இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட மைய நூலகங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் மாணவ - மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தனர். அதுவும் இப்போது முடங்கிப்போயுள்ளது. அதேபோல், மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், முடிவுகளைப் பார்க்கவும் இலவச வசதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே நூலகங்கள் திறக்காததால் முடங்கியுள்ளன.

கரோனாவோடு வாழப் பழகுங்கள் எனச் சொல்லி ஊரையே திறந்துவிட்டிருக்கும் அரசு, அறிவுக் கண்ணைத் திறக்கும் நூலகத்தின் கதவுகளை மட்டும் மூடியிருப்பது எப்படி நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in