

பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகளுக்கு யாரிடம் நன்கொடை வாங்கவில்லை. யாராவது நன்கொடை வசூலிப்பதாக தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என கோயில் இணைஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான ஆரம்பகட்டபணிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கோபுரங்கள், சேதமடைந்த சிலைகள், வர்ணம்பூசும் பணி, கட்டிடங்களை சீரமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்றுவருகிறது. இவற்றை நேற்று பழநி கோயில் இணைஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
கும்பாபிஷேக பணிகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கும்பாபிஷேக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. எட்டு மாதகாலத்தில் கும்பாபிஷேக பணிகள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்குள் இரண்டாவது ரோப்கார் பணியும் முடிவடையும்.
பழநி கோயில் கும்பாபிஷேகத்திற்கு யாரிடமும் நன்கொடை வசூலிக்கவில்லை. யாராவது பழநி கோயில் பெயரை சொல்லி வசூலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.